புடினின் பலவீனத்தை பயன்படுத்துகிறது சீனா! கடுமையாக விமர்சித்த ஐரோப்பிய ஆணைக்குழு தலைவர்
ரஷ்யா மீதான தனது செல்வாக்கை அதிகரிக்க, சீனா புடினின் பலவீனத்தைப் பயன்படுத்துகிறது என ஐரோப்பிய ஆணைக்குழுத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் விமர்சித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியமும் அதன் மேற்கத்திய நட்பு நாடுகளும், சர்வதேச அரங்கில் சீனாவின் சமீபத்திய நடவடிக்கைகளை கவனமாக கவனித்து வருகின்றன.
ஐரோப்பிய ஆணைக்குழு
இந்த நிலையில் ஐரோப்பிய ஆணைக்குழு தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், உக்ரைன் போரில் சீனாவின் பங்கு பிரான்ஸ் மற்றும் பெய்ஜிங் இடையிலான உறவை வரையறுக்க ஒரு தீர்மானிக்கும் காரணியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தனது உரையில், 'உக்ரைன் மீதான கொடூரமான மற்றும் சட்டவிரோதமான ஆக்கிரமிப்பை ரஷ்யா கொண்டுள்ள நிலையில், ஜனாதிபதி ஜி ஜின்பிங் வரம்பு இல்லாத நட்பை புடினுடன் பேணி வருகிறார்.
புடினின் பலவீனத்தை சீனா பார்க்கிறது
ஆனால் சீனாவிற்கும், ரஷ்யாவிற்கும் இடையிலான உறவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ரஷ்யா மீதான தனது செல்வாக்கை அதிகரிப்பதற்கான ஒரு வழியாக, புடினின் பலவீனத்தை சீனா பார்க்கிறது என்பது இந்த பயணத்தின் மூலம் தெளிவாகிறது.
கடந்த நூற்றாண்டின் பெரும்பகுதி ரஷ்யாவிற்கு சாதகமாக இருந்த அந்த உறவில் இருந்த அதிகார சமநிலை, இப்போது தலைகீழாக மாறிவிட்டது என்பது தெளிவாகிறது' என விமர்சித்துள்ளார்.