ரஷ்ய படையெடுப்பால் உக்ரைனுக்கு ஏற்பட்ட இழப்பு! உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை
ரஷ்ய படையெடுப்பினால் மொத்தமாக சேதமடைந்துள்ள உக்ரைனை மீண்டும் கட்டியெழுப்ப 335 பில்லியன் பவுண்டுகள் தேவைப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யா வெளியேறிய பின்னர், ஒரு பத்தாண்டு காலம் அதற்கென தனியாக ஒதுக்க வேண்டும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை
மேலும், 10,000 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 2 மில்லியன் குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதாகவும் உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், கட்டிட இடிபாடுகளை அப்புறப்படுத்த மட்டும் 4 பில்லியன் பவுண்டுகள் தேவைப்படும் எனவும் உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சுமார் 465 சிறார்கள் உட்பட மொத்தம் 9,655 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஐந்தில் ஒரு சுகாதார மையம் சேதப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 650 நோயாளர் காவு வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது அல்லது திருடப்பட்டுள்ளது. நேரிடையாக சேதமடைந்துள்ள கட்டிடங்களின் மதிப்பு 110 பில்லியன் பவுண்டுகள் என உலக வங்கியின் ஆய்வறிக்கையில் கூறப்படுகிறது.
மேலும், உக்ரைன் துருப்புகளின் பலம் வாய்ந்த தடுப்பு நடவடிக்கைகள் இல்லாமல் போயிருந்தால், சேதம் என்பது மிக மோசமாக இருந்திருக்கும் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
15 ஆண்டு கால பொருளாதார வளர்ச்சி
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், ரஷ்யாவுடன் இணைத்துக்கொண்டதாக புடின் அறிவித்துள்ள உக்ரைனின் Donetsk, Kharkiv, Luhansk மற்றும் Kherson ஆகிய நான்கு பிராந்தியங்கள் தான் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரஷ்ய படையெடுப்பால் உக்ரைன் நாட்டின் 15 ஆண்டு கால பொருளாதார வளர்ச்சி மொத்தமாக சீர்குலைந்துள்ளது. மேலும், உக்ரைன் மக்களில் 1.7 மில்லியன் பேர்கள் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த ஆய்வறிக்கையானது உக்ரைன் அரசாங்கம், உலக வங்கியின் சிறப்பு அதிகாரிகள் குழு, ஐரோப்பிய ஆணையம் மற்றும் ஐக்கிய நாடுகள் மன்றம் என ஒருங்கிணைந்து முன்னெடுத்துள்ளனர்.
எரிசக்தி துறையின் மொத்த சேதம் கடந்த கோடையில் இருந்ததை விட இப்போது ஐந்து மடங்கு அதிகமாக உள்ளது என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.
மேலும், உக்ரைனும் சர்வதேச நாணய நிதியமும் 12.7 பில்லியன் பவுண்டுகள் கடன் தொகுப்புக்கு ஒப்புக்கொண்டதாக அறிக்கை வெளியான நிலையிலேயே மொத்த இழப்பு தொடர்பான கூட்டறிக்கையும் வெளியாகியுள்ளது.