ரஷ்ய எல்லைக்குள் ஊடுருவிய உக்ரைன் இராணுவம்: பிரித்தானிய பாதுகாப்பு அதிகாரிகள் வெளியிட்ட எச்சரிக்கை
உக்ரைனின் இராணுவம் வடக்கில் உள்ள கிராமங்களை கைப்பற்றி ரஷ்ய எல்லைக்குள் ஊடுருவியதாக கெர்கீவ் பிராந்தியத்தில் உள்ள ரஷ்யாவின் உயர்மட்ட அதிகாரி விட்ராலி கான்செவ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் உக்ரைன் படைகள் கைப்பற்றிய பகுதிகளில் பதில் தாக்குதல்களை மேற்கொண்டுவருவதாக கூறியுள்ள ரஷ்யா, கெர்கீவ் பிராந்தியத்திலுள்ள இரண்டு நகரங்களில் இருந்து தமது படைகள் பின்வாங்கியுள்ளதையும் உறுதி செய்துள்ளது.
ரஷ்யா வசமிருந்த உக்ரைன்
உக்ரைனில் கடந்த ஆறு மாதமாக தொடரும் யுத்தத்தில் முக்கிய திரும்புமுனையாக ரஷ்யா வசமிருந்த 3 ஆயிரம் சதுர கிலோமீற்றர் பரப்பளவை தாம் கைப்பற்றியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
எனினும் உக்ரைனின் இந்த தரவுகளை சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 20 கிராமங்களை மீளக் கைப்பற்றியுள்ளதாக கூறும் உக்ரைன் இராணுவம், நாட்டின் வடகிழக்கு பகுதியில் தொடர்ந்து தாக்குதல் நடத்திவருவதாக தெரிவித்துள்ளது.
நாட்டின் தெற்கு கெர்சன் பகுதியில் சுமார் 500 சதுர கிலோமீட்டர் பரப்பளவை தனது படைகள் கைப்பற்றியுள்ளதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் ஒட்டுமொத்த செயல்பாட்டு வடிவமைப்பில் தாக்கம்
உக்ரைனிய இராணுவத்தின் வெற்றிகள் ரஷ்யாவின் ஒட்டுமொத்த செயல்பாட்டு வடிவமைப்பில் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தும் என பிரித்தானிய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும் யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட போது நிர்ணயிக்கப்பட்ட அனைத்து இலக்குகளும் நிறைவேற்றப்படும் வரை உக்ரைனில் படை நடவடிக்கை தொடரும் என ரஷ்ய அரசாங்கத்தின் ஊடக பேச்சாளர் திமித்ரி பஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
அண்மைய கள நிலவரங்கள் தொடர்பான தகவல்கள் ஜனாதிபதி விளாடிமிர்
புடினுக்கு வழங்கப்பட்டுவருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.