இரண்டு மாத உக்ரைன் யுத்தம்: வென்றது யார்? தோற்றது யார்? (VIDEO)
உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போர் இரண்டு மாதத்தை கடந்துள்ள நிலையில், உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோல் முழுவதையும் ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ளன.
ரஷ்ய தாக்குதலுக்கு எதிராக உக்ரைன் தொடர்ச்சியாக போராடி வருகின்றது. இந்நிலையில், கருங்கடலில் உக்ரைன் இராணுவம் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ரஷ்ய போர்க் கப்பல் ஒன்று தகர்க்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டது. இதனை ரஷ்யா மறுத்து வருகின்றது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலில் உக்ரைனின் முக்கிய நகரங்கள் நிர்மூலமாகியுள்ளன. ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இலட்சக்கணக்கானோர் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.
இருந்தபோதிலும், உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷ்யாவால் இன்னும் கைப்பற்ற முடியவில்லை. இதனால் தனது போர் வியூகத்தை ரஷ்யா மாற்றியமைத்துள்ளது. அதன்படி, வான் வழி தாக்குதல்களை குறைத்துவிட்டு கருங்கடலில் இருந்து உக்ரைனின் கடற்கரை நகரங்கள் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகின்றது.
இதன் மூலம் கிழக்கு பகுதிகளை எளிதில் வீழ்த்தி, தலைநகர் கீவ்வை கைப்பற்றிவிடலாம் என ரஷ்யா திட்டமிட்டுள்ளது. உக்ரைனின் ஏவுகணை தாக்குதலில் ரஷ்யாவின் 'மோஸ்க்வா' என்ற போர்க்கப்பல் கடலுக்குள் மூழ்கடிக்கப்பட்டது. அந்தக் கப்பலில் எத்தனை ரஷ்ய வீரர்கள் இருந்தார்கள் என்பது தெரியவில்லை.
உக்ரைன் அரசு இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இருந்தபோதிலும், ரஷ்ய இராணுவம் இந்த தகவலை மறுத்து வருகிறது. கடல் கொந்தளிப்பால் கப்பல் கட்டுப்பாட்டை இழந்ததால் அதற்குள் இருந்த வெடிப்பொருள்கள் வெடித்ததில் இந்த விபத்து நேரிட்டதாக ரஷ்யா கூறியுள்ளது.
இவ்வாறான நிலையில், இரண்டு மாத உக்ரைன் யுத்தத்தில் வென்றது யார்? தோற்றது யார்? என்ற சந்தேகம் பலர் மத்தியில் நிலவி வருகின்றது.இது தொடர்பிலான விரிவான தகவல்களுடன் வருகின்றது உண்மையின் தரிசனம் நிகழ்ச்சியின் விசேட தொகுப்பு,