உக்ரைன் அணுமின் ஆலை தீப்பரவல்! 1986 பேரழிவை சுட்டிக்காட்டி எச்சரிக்கை! (நேரலை)
தென்கிழக்கு உக்ரைனில் உள்ள ஜபோரிஜியா அணுமின் நிலையத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளபோதிலும் அதன் மீது தொடர்ந்தும் ரஷ்ய படையினரின் தாக்குதல் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தீயணைப்பு வீரர்களால் இன்னும் தீயை அணைக்க முடியவில்லை என்று ஆலை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்
சர்வதேச அணுசக்தி அமைப்பின் அதிகாரிகள் மற்றும் அமெரிக்க அரசாங்க அதிகாரிகள், நிலைமை குறித்து உக்ரைன் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது.
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் அணுசக்தி பாதுகாப்பு நிபுணரான கிரஹாம் எலிசனின் கருத்துப்படி, தீப்பரவல் தொடர்ந்தால் அணுஉலை உருகக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக 1986 ஆம் ஆண்டு செர்னோபில் பேரழிவைப் போலவே பல ஆண்டுகளாக பிராந்தியத்தில் உள்ள பகுதிகளில் கதிரியக்க தாக்கம் ஏற்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
சுற்றியுள்ள பகுதியில் மின்சாரத்தை துண்டிப்பதற்காக ரஷ்ய படைகள் ஆலையின் இயக்கத்தை முடக்க முயற்சிக்கக்கூடும் என்று எலிசன் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்ய துருப்பு கப்பல்கள், கரையோரத்துக்கு வரும் நிலையில், உக்ரைனின் மிகப்பெரிய துறைமுகமான ஒடேசாவின் அற்புதமான நகரத்துக்கு பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
குறித்த நகரத்தை நோக்கி ரஷ்ய கடற்படை கப்பல்கள் நெருங்கி வருவதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் ரஷ்ய படைகளின் நகர்வை தடுக்க, மணல் மூட்டைகள் குவிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் இந்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
ரஷ்யாவின் போர் குடிமக்களுக்கு எதிரான போராக மாறிவிட்டது.
இதனையடுத்தே தடுப்புப்பணிகளில் ஈடுபடுவதாக உக்ரைய்னின் ஒடேசா மக்கள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவுக்கு ஆதரவாக உக்ரைய்னுக்குள் நுழையும் பெலாரஸ் படைகள்! உக்ரைன் இராணுவத்துடன் போரிடுவதற்கு உக்ரைய்னுக்குள் செல்வதற்கு பெலாரஸ்ஸின் துருப்புக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உக்ரைனிய இராணுவம் இதனை தெரிவித்துள்ளது.
ஒரு பேஸ்புக் பதிவில், உக்ரைனின் ஆயுதப் படை இதனை குறிப்பிட்டுள்ளது. அதில், பெலாரஸ்ஸின் இராணுவப் பிரிவுகள், உக்ரைனுடனான எல்லையைக் கடப்பதற்கான உத்தரவைப் பெற்றுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே உக்ரைன் நகரங்கள் மீது ஏவுகணை தாக்குதல்களை நடத்த, ரஷ்யா பெலாரஸின் பிரதேசத்தை பயன்படுத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சுமத்தி வருகின்றது.