உக்ரைன் ஆளுநரை குறிவைத்து ரஷ்யாவின் தாக்குதல்! 12பேர் பலி! 30பேர் காயம்! (video)
உக்ரைனின் துறைமுக நகரமான மைகோலாய்வில் ஆளுநர் அலுவலகம் அமைந்துள்ள அரச கட்டிடம் ஒன்றின் மீது நேற்று ரஷ்யா நடத்திய தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டதுடன் சுமார் 30 பேர் காயமடைந்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த கட்டிடத்தில் இராணுவ வீரர்கள் எவரும் இருக்கவில்லை என்று மைகோலாய்வ் நகர முதல்வர் அறிவித்துள்ளார்.
இந்தநிலையில் பிராந்திய ஆளுநர் விட்டலி கிம்மை குறிவைக்க ரஷ்ய படைகள் முயற்சித்திருக்கலாம் என நகர முதல்வர் சென்கெவிச் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ரஷ்ய மற்றும் உக்ரைன் இடையேயான பேச்சுவார்த்தைகள் நிச்சயமாக முன்னோக்கி நகர்ந்துள்ளன என்று ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி அலுவலகத்தின் துணைத் தலைவரான இஹோர் சோவ்க்வா தெரிவித்துள்ளார்.
இஸ்தான்புல்லில் நடந்த பேச்சுவார்த்தையின்போது, ரஷ்ய தரப்பு முதல் தடவையாக உக்ரைனிய நிலைப்பாட்டைக் கேட்டறிந்ததாக அவர் கூறியுள்ளார்.
எனினும் துருக்கியில் வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு ஏற்ப கிய்வ் அல்லது செர்னிஹிவ் ஆகிய பகுதிகளில் இருந்து ரஷ்யா தனது படைகளை திரும்பப் பெறவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்
இதற்கிடையில் ஐக்கிய நாடுகள் சபையின் சமீபத்திய புள்ளிவிபரங்களின்படி, ரஷ்யாவின் படையெடுப்பில் இருந்து தப்பிக்க உக்ரைனில் இருந்து நாற்பது இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெளியேறியுள்ளனர்.
பெப்ரவரி 24 அன்று படையெடுப்பு ஆரம்பித்ததில் இருந்து 4,019,287 உக்ரைனியர்கள் நாட்டின் எல்லைகளைத் தாண்டி சென்றுள்ளனர்.
இதில் 23 லட்சம் பேர் வரை போலந்துக்கு சென்றுள்ளனர்.