தடைக்கு மேல் தடை! திணறும் ரஷ்யா
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் ஆரம்பித்த நாளிலிருந்து தடைக்கு மேல் தடைகளை ரஷ்யா எதிர்கொண்டு வருகிறது.
உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல்கள் 14வது நாளாகவும் தொடர்கிறது. இந்தப் போரில் இரு நாடுகளை சேர்ந்த வீரர்கள் உள்பட பலர் உயிரிழந்து உள்ளனர்.
ரஷ்ய படைகள் முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான் தாக்குதல், பீரங்கி தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் அரசும் ரஷ்யாவிற்கு ஈடுகொடுத்து வருகிறது. சர்வதேச நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை செய்துவருகின்றன.
தங்கள் நாட்டையும் மண்ணையும் பாதுகாக்க களமாடுவேன் என்று உறுதியாக அறிவித்திருக்கிறார் உக்ரைன் ஜனாதிபதி.
இந்தநிலையிலேயே சர்வதேச நாடுகள் உக்ரைன் பக்கபலமாக இருப்பதாக அறிவித்திருக்கின்றன. முடிந்தவரை ரஷ்யா மீதான தடைகளை விதித்துக்கொண்டிருக்கின்றன.
குறிப்பாக உக்ரைன் மீதான தாக்குதலைக் கண்டிக்கும் வகையில் ஆப்பிள், லிவிஸ், நெட்பிளிக்ஸ் போன்ற பல்வேறு நிறுவனங்கள் தங்களது சேவையை ரஷ்யாவில் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன.
இந்நிலையில், உக்ரைனுக்கு எதிரான போர் எதிரொலியாக ரஷ்யாவில் தங்களது செயல்பாடுகளை நிறுத்துவதாக கொகோ கோலா மற்றும் பெப்சி போன்ற குளிர்பான நிறுவனங்களும் அறிவித்துள்ளன.
போர் தொடங்கிய நாளிலிருந்து இன்றைய நாள் வரைக்கும் ரஷ்யா மீதான தடைகள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், ரஷ்யாவிற்குள் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருப்பதாகவும் பொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து உள்நாட்டில் பொதுமக்கள் அரசுக்கு எதிராக போராட்டங்களை ஆரம்பித்துள்ளதாகவும், இதனால் ரஷ்யா திணறுவதாகவும் மேற்குல ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.