உக்ரைன் மரியுபோல் நகரத்தின் மீது ரஷ்யாவின் அடுத்தடுத்து இரண்டு பயங்கர தாக்குதல்
உக்ரைனில் இருக்கும் மரியுபோல் நகரத்தின் மீது ரஷ்யா அடுத்தடுத்து இரண்டு சூப்பர் குண்டுகளை வீசி உள்ளது. இதனால் அங்கு மிகப்பெரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் தரப்பு தெரிவித்துள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தீவிரம் அடைந்துள்ளது. பேச்சுவார்த்தைகள் பலன் அளிக்காத நிலையில் உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தி உள்ளது.
முக்கியமான நகரங்களை குறி வைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனில் ரஷ்யா குறி வைத்து இருக்கும் முக்கியமான நகரங்களில் ஒன்று மரியுபோல் நகரம் ஆகும். இங்கு நான்கரை லட்சம் மக்கள் வசித்து வந்தனர்.
போர் காரணமாக கிட்டத்தட்ட இரண்டு லட்சம் மக்கள் இங்கு ஏற்கனவே வெளியேற்றப்பட்டுவிட்டனர். இந்த நிலையில்தான் மரியுபோல் மீது ரஷ்யா கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. அசோவ் கடல் பகுதிக்கு அருகே இந்த துறைமுக நகரம் அமைந்துள்ளது. ரஷ்யா ஏற்கனவே கைப்பற்றிய கிரிமியாவையும், உக்ரைனில் ரஷ்யா வசம் இருக்கும் வடக்கு, கிழக்கு பகுதிகளையும் இணைக்கும் வகையில் இந்த மரியுபோல் அமைந்துள்ளது.
அதேபோல் கடல் ரீதியாகவும் இந்த மரியுபோல் துறைமுகம் மிக முக்கியம் ஆகும். இதனால் இந்த மரியுபோல் நகரத்தை கைப்பற்ற ரஷ்யா தீவிரமாக முயன்று வருகிறது. இதனால் கடந்த ஒரு வாரமாக மரியுபோல் நகரம் மீது ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இந்த நிலையில்தான் இங்கு இரண்டு சூப்பர் குண்டுகளை ரஷ்யா வீசியதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. பொதுவாக அணு ஆயுதம் தொடங்கி ஹைட்ரஜன் குண்டு வரை அனைத்தையும் சூப்பர் குண்டு என்றுதான் சொல்வார்கள்.
ஆனால் உக்ரைனில் இதுவரை ரஷ்யா அணு ஆயுதங்களையோ, ஹைட்ரஜன் குண்டுகளையோ வீசவில்லை. மாறாக வேறு வகையான அதீத ஆற்றல் கொண்ட சூப்பர் குண்டுகளை வீசி வருவதாக உக்ரைன் அரசு தரப்பு தெரிவித்துள்ளது. இது என்ன வகையான சூப்பர் குண்டுகள் என்று இன்னும் விரிவாக தெரியவில்லை. பொதுவாக சூப்பர் குண்டுகள் ஒரு நொடியில் பலத்த சேதத்தை ஏற்படுத்தி, தாக்கப்பட்ட இடத்தை அப்படியே தரைமட்டமாக மாற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தாக்குதல் நடத்தப்படும் பகுதிகளில் மொத்தம் 2 லட்சம் பேர் வரை இருப்பதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. இவர்கள் அங்கே சிக்கி இருப்பதாகவும்., அவர்கள் கடும் ஆபத்தில் இருப்பதாகவும் உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. நரகம் இறங்கி வந்தது போல மரியுபோல் கொடூரமாக காட்சி அளிக்கிறது. பல இடங்களில் பிணங்களும், இடிந்து விழுந்த கட்டிடங்களில் நிரம்பி காணப்படுகிறது என்று மரியுபோலில் இருந்து தப்பித்து வந்த மக்கள் பலர் தெரிவித்துள்ளனர்.
இங்கு இடையில் நிறுத்தப்பட்ட மீட்பு பணிகள் மீண்டும் தொடங்கி உள்ளன. அங்கு கிட்டத்தட்ட 2 லட்சம் பேர் குண்டுகள் போடப்படும் பகுதிகளில் சிக்கி உள்ளனர். ரஷ்யா விமானம் மூலமும், ராக்கெட் மூலமும் இந்த சூப்பர் குண்டுகளை வீசி வருகிறது. பல்வேறு கட்டிடங்களில் ரஷ்யா சூப்பர் குண்டுகளை வீசியது வீடியோவாக வெளியாகி உள்ளது. மரியுபோல் நகரத்தை மொத்தமாக அழித்துவிட்டு அதை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர ரஷ்யா நினைப்பதாக உக்ரைன் இந்த தாக்குதல் பற்றி குற்றஞ்சாட்டி உள்ளது.