ரஷ்ய போர் கப்பல் தாக்கி அழிப்பு! - உக்ரைன் இராணுவம் வெளியிட்ட காணொளி (Video)
ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள உக்ரைனிய துறைமுக நகரமான பெர்டியன்ஸ்கில் ரஷ்ய போர் கப்பல் ஒன்று தாக்கி அழிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், மேலும் கப்பல்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த காணொளிகளை உக்ரைன் இராணுவம் இன்று வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எவ்வாறாயினும், கப்பலில் ஏற்பட்ட வெடிப்பு மற்றும் தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து தெளிவாக அறிவிக்கப்படவில்லை. ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்த நான்கு நாட்களுக்குப் பின்னர் முற்றுகையிடப்பட்ட மரியுபோல் துறைமுகத்தின் மேற்கில் உள்ள பெர்டியன்ஸ்க் கைப்பற்றப்பட்டது.
ரஷ்யா தனது துருப்புக்களுக்கான உபகரணங்களை கொண்டு செல்ல இந்த துறைமுகத்தை ஒரு தளமாக பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், கடற்படை மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொளியில் துறைமுகத்தில் வெடிப்புகள் மற்றும் ஒரு பெரிய கப்பல் தீப்பிடித்து எரிவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
20 டாங்கிகள், 45 கவச வாகனங்கள் மற்றும் 400 துருப்புக்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட "பெரிய இலக்கை" இராணுவம் தாக்கியதாக உக்ரைன் துணை பாதுகாப்பு அமைச்சர் ஹன்னா மல்யார் தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார்.
பெர்டியன்ஸ்க் ரஷ்யர்களுக்கு முக்கிய மூலோபாய மதிப்புடையது, இது கிரிமியாவிற்கும் முற்றுகையிடப்பட்ட நகரமான மரியுபோல் கிழக்கே சுமார் 80 கிமீ (50 மைல்கள்) தொலைவில் உள்ளது. அந்த பகுதியில் சுமார் 100,000 மக்கள் ரஷ்ய குண்டுவீச்சை எதிர்கொண்டு சிக்கித் தவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெர்டியன்ஸ்க் மற்றும் மெலிடோபோல் நகரங்களைக் கைப்பற்றுவது, கிரிமியாவிலிருந்து ரஷ்ய எல்லைக்கு தரைப்பாலத்தை உருவாக்குவதற்கான ரஷ்யாவின் முயற்சியின் ஒரு பகுதியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.