உக்ரைன் படையினரிடம் சிக்கிய ரஷ்ய வீரர்கள்
ரஷ்ய வீரர்களை சித்திரவதை செய்ததாக உக்ரைன் மீது ரஷ்யா குற்றவியல் வழக்குகளைத் தொடரவுள்ளதாக ரஷ்யாவின் புலனாய்வுக் குழு அறிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பெப்ரவரி 24 ஆம் திகதி தொடங்கிய போர் நீடித்துள்ள நிலையில், உக்ரைனின் தலைநகர் கிவ் உட்பட அனைத்து நகரங்கள் மீது ரஷ்ய படைகள் ஏவுகணை வான்வழி தாக்குதல்களை நடத்தி உக்ரைனின் சில பகுதிகளை கைப்பற்றியுள்ளன.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில்,உக்ரைன் படையினரும் எதிர் தாக்குதலை மேற்கொண்டு போராடி வருகின்றனர்.
இந்நிலையில், ரஷ்ய வீரர்கள் உக்ரைனியப் படைகளால் ஜாபோரிஜியா (Zaporizhzhia) மற்றும் மைகோலெய்வ் (Mykolaiv) பகுதிகளில் கைது செய்யப்பட்டு சட்டவிரோதமான முறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்,உண்மையான நிலைமைகள் குறித்து தவறான விளக்கங்களை வழங்குவதற்காக ரஷ்யர்கள் உடல்ரீதியான வன்முறை மற்றும் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டனர் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, போர்க் கைதிகளை நடத்துவது தொடர்பான அனைத்து தகவல்களையும் சரிபார்ப்பதாகவும், ஏதேனும் மீறல்கள் இருந்தால் விசாரித்து உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் உக்ரைன் கூறியுள்ளது.