உக்ரைனுக்கு 375 மில்லியன் டொலர் மதிப்பிலான இராணுவ உதவி - பிரித்தானியா அறிவிப்பு
உக்ரைனுக்கு 375 மில்லியன் டொலர் மதிப்பிலான இராணுவ உதவிகளை வழங்க உள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது. பிரித்தானிய பிரதரம போரிஸ் ஜோன்சன் இதனை தெரிவித்துள்ளார்.
காணொளி ஊடாக உக்ரைன் நாடாளுமன்றில் பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா பெப்ரவரி 24ம் திகதி தாக்குதலை தொடங்கியது. தற்போது வரை அந்நாட்டில் போர் நீடித்து வரும் நிலையில், இருதரப்பிலும் அதிக அளவில் உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
இதனால் லட்சக்கணக்கான உக்ரைன் மக்கள் அகதிகளாக தப்பிச் சென்றுள்ளனர். உக்ரைன் மீதான போரை நிறுத்துமாறு பிரித்தானிய, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் ரஷ்யாவை வலியுறுத்தி வருகின்றன.
மேலும் ரஷ்யாவின் இந்த போர் நடவடிக்கையை கண்டித்து அந்நாட்டுக்கு எதிராக வரலாறு காணாத அளவிலான பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
போரில் நேரடியாக பங்கேற்காமல் பிரித்தானியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு தேவையான இராணுவம் மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கி வருகின்றன.
அந்த வகையில் உக்ரைனுக்கு மேலும் இராணுவ உதவிகள் வழங்குவது குறித்து பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதன்படி, உக்ரைனுக்கு பிரித்தானிய அரசாங்கம் மேலும் 375 மில்லியன் டொலர் மதிப்பிலான இராணுவ உதவிகளை வழங்க உள்ளதாக அவர் அறிவித்தார்.