உக்ரைனுக்கு மேலும் ஆயுதங்களை வாரி வழங்கும் பிரித்தானியா - போரிஸ் ஜோன்சன் உறுதி
உக்ரைனுக்கு மேலும் இராணுவ தளவாடங்களை வழங்க உள்ளதாக, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியிடம் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
கவச வாகனங்கள், ஆளில்லா விமானங்கள் மற்றும் தொட்டி எதிர்ப்பு ஆயுதங்கள் உக்ரைனுக்கு அனுப்பப்படும் என்று ஜெலென்ஸ்கியிடம் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளதாக டவுனிங் வீதி செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
கடந்த வாரம் பிரித்தானியாவிற்கு வந்த 20க்கும் மேற்பட்ட உக்ரைன் துருப்புக்களுக்கு பயிற்சி அளித்ததற்காக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி பிரதமர் போரிஸ் ஜோன்சன் நன்றி தெரிவித்தார். இரண்டு மாதங்களுக்கு முன்பு உக்ரைன் ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்டது.
இரண்டாம் கட்டமாக போர் தொடுத்துள்ள ரஷ்யா உக்ரைனின் முக்கிய நகரமான மரியுபோலை கைப்பறியுள்ளது. இந்நிலையில், உக்ரைனில் இருக்கும் தமது நாட்டு தூதரகத்தை அடுத்த வாரம் மீண்டும் திறக்கவுள்ளதாக பிரித்தானிய பிரதமர் தெரிவித்துள்ளார்.
மேலும், பிரித்தானியாவில் பயிற்சி பெறும் உக்ரேனிய வீரர்களுக்கு 120 கவச வாகனங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
சமீப நாட்களில் ரஷ்யா தனது இராணுவ முயற்சிகளை குவித்து வரும் Donbas இன் நிலைமை குறித்து ஜனாதிபதி ஜெலென்ஸ்கி பிரித்தானிய பிரதமர் ஜோன்சனிடம் தெளிவுப்படுத்தியுள்ளார்.
மரியுபோல், ஒடெசா மற்றும் எல்விவ் உள்ளிட்ட பகுதிகளில் பொது மக்களை இலக்கு வைத்து ரஷ்யப் படைகள் நடத்தி வரும் தாக்குதல்களை இரு நாட்டு தலைவர்களும் கண்டித்தனர்.
ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு பொறுப்புக் கூறப்படும் என்றும், போர்க்குற்றங்கள் பற்றிய ஆதாரங்களை சேகரிக்க இங்கிலாந்து அரசாங்கம் உதவுவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய இராணுவத்தின் உறுப்பினர்களுக்கு எதிரான பிரித்தானியாவின் புதிய பொருளாதாரத் தடைகள் குறித்தும் பிரதமர் உக்ரைன“ ஜனாதிபதியிடம் தெளிவுப்படுத்தியுள்ளதாக டவுனிங் வீதி செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
உக்ரைனுக்கான நீண்டகாலப் பாதுகாப்புத் தீர்வை உருவாக்க பிரித்தானியா எவ்வாறு பங்காளிகளுடன் இணைந்து செயல்படும் என்பது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
மேலும் கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஜி7 நிதி அமைச்சர்கள் கூட்டம் உட்பட, ஏனைய நாடுகள் மற்றும் குழுக்களுடன் கூடுதல் நிதி உதவி வழங்குவது குறித்து விவாதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.