உக்ரைனுக்கு ஆதரவு வழங்கும் எந்த நாடும் இராணுவ பதிலை எதிர்கொள்ளும் - புடின் கடும் எச்சரிக்கை
உக்ரைன் விவகாரத்தில் தலையிடும் எந்த நாடும் "மின்னல் வேகமான" இராணுவ பதிலை எதிர்கொள்ளும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மேற்கு நாடுகளுக்கு புதிய அச்சுறுத்தலை விடுத்துள்ளார்.
"இதற்கான அனைத்து கருவிகளும் எங்களிடம் உள்ளன, தேவைப்பட்டால், நாங்கள் அவற்றைப் பயன்படுத்துவோம்," என்று அவர் கூறினார். இது தொடர்பாக அனைத்து முடிவுகளையும் நாங்கள் ஏற்கனவே எடுத்துவிட்டோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புடினின் புதிய அச்சுறுத்தல் குறித்து சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அண்மைய நாட்களில் மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவை அதிகரித்ததை அடுத்து புடின் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யாவை தோற்கடிப்பதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் நேற்றைய தினம் அறிவித்திருந்தார்.
மேலும், சமீப நாட்களில், உக்ரைனுக்கு இராணுவ ஆதரவை அதிகரிப்பதற்கான உறுதிமொழிகள் அதிகரித்து வருகின்றன, இதில் 50 விமான எதிர்ப்பு டாங்கிகளை அனுப்புவதாக ஜேர்மனி அறிவித்தது, உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்க பிரிட்டனும் அழைப்பு விடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவதன் மூலம் மேற்கு நாடுகள் "நெருப்பில் எண்ணெயை ஊற்றுவதாக" ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இந்த வார தொடக்கத்தில் கூறினார். அத்துடன், இந்த மோதல் மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
போலந்து மற்றும் பல்கேரியாவிற்கான எரிவாயு விநியோகத்தை ரஷ்ய நிறுத்தியுள்ளதுடன், இதனால் இன்று பதட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில் புட்டினின் எச்சரிக்கை வெளிவந்துள்ளது.