ரஷ்ய - உக்ரைன் மோதல்! முதல் பிரித்தானியர் பலி
உக்ரைனில் பிரித்தானிய பிரஜை ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், இரண்டாவது நபரைக் காணவில்லை என இங்கிலாந்து வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர் ஸ்காட் சிப்லி என்றும் அவர் உக்ரேனியப் படைகளுக்காகப் போராடியவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
உக்ரைன் ரஷ்யாவிற்கு இடையே ஏற்பட்டுள்ள மோதலில் கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட முதல் பிரித்தானிய நாட்டவர் ஆவார், இருவரின் அடையாளத்தையும் வெளியுறவு அமைச்சகம் வெளியிடவில்லை.
சிப்லியின் மரணம் மற்றும் இரண்டாவது நபர் எப்படி அல்லது எப்போது காணாமல் போனார் என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.
இந்த இரண்டு நபர்களும் மரியுபோல் அல்லது டான்பாஸில் உக்ரேனிய ஆயுதப் படைகளுடன் பணியாற்றும் வெளிநாட்டு தன்னார்வலர்களாக இருக்கலாம் என்று இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே, காணாமல் போன பிரித்தானியப் பிரஜை தொடர்பில் "அவசரமாக மேலதிக தகவல்களைத் தேடுவதாக" வெளியுறவு அலுவலகப் பேச்சாளர் தெரிவித்தார்.
போலந்தின் எல்லைக்கு அருகிலுள்ள இராணுவப் பயிற்சி மையத்தின் மீது ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலின் போது இங்கிலாந்து சிறப்புப் படைகளின் மூன்று முன்னாள் உறுப்பினர்கள் மார்ச் மாதம் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது - ஆனால் இது உறுதிப்படுத்தப்படவில்லை.
பெப்ரவரியில் உக்ரைனை விட்டு வெளியேறுமாறு பிரித்தானிய பிரஜைகளை அரசாங்கம் வற்புறுத்தியதோடு, ரஷ்யா ஆக்கிரமித்ததிலிருந்து அந்நாட்டிற்கு பயணிக்க வேண்டாம் என்றும் மக்களைக் கூறியுள்ளது.