வடக்கு, மேற்கு பகுதிகளில் இருந்து உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷ்யா படைகள் நெருங்கியது
சிறிய நகரங்களை ரஷ்யா பிடித்திருந்தாலும் உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் 2வது பெரிய நகரான கார்கிவ் ஆகியவற்றை கைப்பற்ற ரஷ்ய படைகள் தீவிரமாக உள்ளன.
உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போர் இன்று 11வது நாளாக நீடிக்கிறது. முக்கிய நகரங்களில் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. உக்ரைனின் கெர்சன் உள்ளிட்ட சில நகரங்களை ரஷ்யா படைகள் கைப்பற்றி உள்ளன.
மேலும் அந்நாட்டின் 2 அணுமின் நிலையங்களும் ரஷ்யா வசம் சென்றுள்ளது.
சிறிய நகரங்களை ரஷ்யா பிடித்திருந்தாலும் உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் 2வது பெரிய நகரான கார்கிவ் ஆகியவற்றை கைப்பற்ற ரஷ்யா படைகள் தீவிரமாக உள்ளன.
அந்நகரங்களில் தாக்குதல் கடுமையாக இருந்து வருகிறது. ஏவுகணை வீச்சு, வான் வெளி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் கீவ், கார்கிவ் நகருக்குள் ரஷ்யா படையினர் புகுந்து சண்டையிட்டு வருகின்றனர்.
அவர்களுக்கு எதிராக உக்ரைன் ராணுவமும் கடுமையாக போராடி வருகிறது. இதனால் இந்த 2 நகரங்களை கைப்பற்ற முடியாமல் ரஷ்யா படைகள் இருந்து வருகிறது. இதற்கிடையே தலைநகர் கீவ்வை நோக்கி வடக்கு பகுதியில் 64 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரஷ்யா படைகள் அணிவகுத்து வரும் செயற்கை கோள் புகைப்படம் வெளியானது.
அப்போது தலைநகர் கீவ்வில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் ரஷ்யா படைகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் ரஷ்யா படைகள் உக்ரைன் தலை நகர் கீவ்வை நெருங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
வடக்கு மற்றும் மேற்கு பகுதியில் இருந்து தலைநகர் கீவ்வுக்கு மிக அருகில் ரஷ்யா படைகள் நெருங்கியுள்ளது.
இதனால் கீவ் நகருக்குள் விரைவில் பெருமளவில் ரஷிய படைகள் நுழைந்து தாக்குதலில் ஈடுபடலாம் என்ற பீதி நிலவுகிறது.
மேலும் கீவ் நகரின் தெற்கு பகுதியில் உள்ள கனிவ் நீர்மின் சக்தி நிலையத்தை நோக்கி ரஷ்யா படைகள் வந்து கொண்டிருக்கின்றன. ரஷ்யா ராணுவத்தினர் 100 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.