கஞ்சன விஜேசேகர பொய்யுரைப்பதாக ரஷ்ய தூதரகம் குற்றம் சுமத்தியுள்ளது
மின்வலு எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பொய்யுரைப்பதாக ரஷ்ய தூதரகம் குற்றம் சுமத்தியுள்ளது.
இலங்கைக்கு எரிபொருட்களை வழங்க முடியாது என கூறியதாக அமைச்சர் வெளியிட்ட கருத்து முற்றிலும் பிழையானது என இலங்கைக்கான ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான ரஷ்ய தூதரகத்தின் உயர் அதிகாரி ஒருவர் நேற்று (24) தெரிவித்துள்ளதாக தெற்கு ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.
ரஷ்ய நிறுவனமொன்றுடன் எல்லே குணவன்ச தேரர் தொடர்பு கொண்டுள்ளதாகவும், அந்த நிறுவனம் இலங்கைக்கு குறைந்த விலையில் எரிபொருள் வழங்க இணக்கம் வெளியிட்டு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாகவும் அந்த கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சைபீரிய மசகு எண்ணெய் கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்திற்கு அருகாமையில் நங்கூரமிடப்பட்டுள்ளது என அண்மையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியிருந்தார்.
ரஷ்யாவிடம் மசகு எண்ணெய் பெற்றுக்கொள்வது தொடர்பில் அமைச்சர் கஞ்சன விஜேசேகர, ரஷ்ய தூதுவருடன் எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
ரஷ்யா இந்திய நிறுவனங்களுக்கு மசகு எண்ணெய் வழங்கியுள்ள போதிலும், இலங்கை மசகு எண்ணெய் பெற்றுக்கொள்ளும் முனைப்புக்களில் ஈடுபடவில்லை என தெற்கு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.