ரஷ்ய - உக்ரைன் எல்லையில் போர் பதற்றம்! - ஐந்து உக்ரேனியர்கள் சுட்டுக்கொலை
ரஷ்ய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற ஐந்து உக்ரேனிய நாட்டவர்கள் ரஷ்ய படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்ய - உக்ரைன் நாடுகள் இடையிலான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா எந்த நேரத்திலும் போர் தொடுக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளன.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் ரஷ்ய படையினர் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதுடன் எல்லையில் அதிகளவான படைகளை குவித்துள்ளது. இந்நிலையில், உக்ரைனில் இருந்து ரஷ்யாவுக்குள் நுழைய முயன்ற ஐந்து பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கள் எல்லைக்குள் ஊடுருவ முயன்றபோது ஏற்பட்ட மோதலில் 5 பேரை சுட்டுக் கொன்றதாக ரஷ்ய இராணுவம் அறிவித்துள்ளது.
ரோஸ்டோவ் பிராந்தியத்தில் உள்ள மித்யகின்ஸ்காயா கிராமத்திற்கு அருகே காலை 6:00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுயள்ளதாக ரஷ்ய இராணுவம் அறிவித்துள்ளது. இந்த சம்பவத்தால் எல்லை பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விமானங்கள் ரத்து
போர் பதற்றம் காரணமாக உக்ரைன் நாட்டுக்கு செல்லும் விமானங்களை பல்வேறு நாடுகள் ரத்து செய்துள்ளன. அங்கு வசித்து வருபவர்களை உடனடியாக வெளியேற வேண்டும் என இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் அறிவுறுத்தி உள்ளன.
உக்ரைன் - ரஷ்யா இடையே பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் அந்த நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் அனைத்தையும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவித்துள்ளது. நிலைமை சீரானதும் மீண்டும் விமான போக்கு வரத்து தொடங்கப்படும் என அந்த நாடு அறிவித்துள்ளது.