ஆக்கிரமிப்பு பகுதிகளில் உக்ரைன் பொதுமக்களை பணயக்கைதிகளாக கடத்திச்செல்லும் ரஷ்ய படையினர்! (காணொளி)
ரஷ்யாவை நிறுத்துவதில் ஐரோப்பா தாமதமாகவே செயற்பட்டதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி குற்றம் சுமத்தியுள்ளார்.
பிரஸ்ஸல்ஸில் நடந்த ஐரோப்பிய சபை உச்சிமாநாட்டில் நேற்று இரவு உரையாற்றினார்.
இதன்போது கருத்துரைத்த அவர் "நீங்கள் தடைகளை விதித்துள்ளீர்கள். நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். இவை சக்திவாய்ந்த படிகள்.
எனினும் கொஞ்சம் தாமதமாகிவிட்டது.
ஏற்கனவே தடைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால், சிலவேளை ரஷ்யா போருக்குச் சென்றிருக்காது என்று ஸெலென்ஸ்கி குறிப்பிட்டார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான உக்ரைனின் கோரிக்கையை அங்கீகரிக்குமாறு அண்டை நாடுகளிடம் ஸெலென்ஸ்கி வேண்டுகோள் விடுத்தார்.
இதில் தாமதிக்கவேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இதேவேளை உக்ரைனில் உள்ள ரஷ்ய கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மக்கள், பலவந்தமாக காணாமல் ஆக்கப்படுகிறார்கள் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
குறைந்தபட்சம் 36 குடிமக்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு சம்பவமாக Viktoriia Roshchyna என்ற செய்தியாளர், மார்ச் 15 அன்று அடையாளம் தெரியாதவர்களால், அழைத்து செல்லப்பட்டு ஆறு நாட்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ரஷ்யாவின் உளவுத்துறையான FSB ஆல் அவர் கைது செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.