3ஆம் உலகப் போரைத் தடுக்கும் வல்லமை எனக்கு மட்டுமே உண்டு: ரஷ்யா - உக்ரைன் போர் குறித்து டிரம்ப் தெரிவிப்பு
3ஆம் உலகப் போரைத் தடுக்கும் வல்லமை எனக்கு மட்டும் தான் உண்டு என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா - உக்ரைன் போர் குறித்து இன்றைய தினம் (05.03.2023) காணொளி மூலம் கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாத இறுதியில் ரஷ்ய ஜனாதிபதி புடின் உக்ரைன் மீதான போர் நடவடிக்கையை ஆரம்பித்தார். ஆரம்பத்தில் ரஷ்யப் படைகள் வேகமாக முன்னேறி உக்ரைனைத் தாக்கியது.
இருப்பினும், அமெரிக்கா மற்றும் இதர ஐரோப்பிய நாடுகள் உதவியுடன் உக்ரைன் பதில் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.
பெரும் தாக்கங்கள்
போர் ஆரம்பித்த பெப்ரவரி மாதத்திலிருந்து இதுவரை ரஷ்யா 1,16,950 வீரர்களை இழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், உக்ரைனுக்குப் புதிதாக 2.5 பில்லியன் டொலர் நிதியுதவி வழங்கி அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. அத்துடன், ஆயுத உதவியாக 31 போர் டாங்கிகளை உக்ரைனுக்கு வழங்குவதாகவும் அமெரிக்கா உறுதியளித்துள்ளது.
இந்த போர் தொடர்வதால் இரு நாடுகளை மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் பெரும் தாக்கங்கள் ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ரஷ்யா - உக்ரைன் போர் குறித்து காணொளி மூலம் தெரிவித்துள்ளதாவது,
போரைத் தடுக்கும் வல்லமை
தற்போதைய அமெரிக்க அரசு போரை ஒழுங்காகக் கையாளவில்லை. நான் ஜனாதிபதியாக இருந்திருந்தால் ரஷ்யா-உக்ரைன் நாடுகளுக்கிடையே போர் ஏற்பட்டிருக்காது.
புடினும் போரை ஆரம்பித்திருக்க மாட்டார். லட்சம் ஆண்டுகள் ஆனாலும் இது போன்ற போரை நடத்த விட்டிருக்கமாட்டேன். போர் சூழல் ஏற்பட்டது தெரிந்திருந்தால், நான் பேச்சுவார்த்தை நடத்தி 24 மணிநேரத்தில் போரை முடிவுக்குக் கொண்டு வந்திருப்பேன். இப்போது அமெரிக்கா டாங்கிகளை கொடுக்கிறது.
அடுத்து என்ன அணு ஆயுதங்களை தரப்போகிறதா? இந்த முட்டாள்தனமான போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். ரஷ்ய ஜனாதிபதி புடின் நான் என்ன கூறினாலும் கேட்பார்.
போரை நிறுத்த எனக்கு ஒரு நாளுக்கு மேலாகாது. 3ஆம் உலகப் போரைத் தடுக்கும் வல்லமை எனக்கு மட்டும் தான் உண்டு. இந்த போரை நிறுத்திக் காட்ட என்னால் மட்டுமே முடியும்" எனத் தெரிவித்துள்ளார்.