ரஷ்ய ஜனாதிபதி எடுத்த அதிரடி முடிவு! முக்கிய அமைச்சர் பதவி நீக்கம்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், திடீரென தனது போக்குவரத்து அமைச்சர் ரோமன் ஸ்டரோவொயிட்டை( Roman Starovoit) பதவியிலிருந்து நீக்கியுள்ளார்.
உக்ரைன்-ரஸ்ய யுத்தம் நான்காவது ஆண்டாக நீடிக்கும் சூழ்நிலையில் போக்குவரத்து துறைக்கு பல சவால்கள் எழுந்துள்ள நேரத்தில் இந்த பதவி நீக்கம் இடம்பெற்றுள்ளது.
பதவி நீக்கம்
போக்குவரத்து துறை , உதிரி பாகங்கள் பற்றாக்குறையால் பாதிக்கப்படுவதுடன் ரஷ்ய தொடருந்து நிறுவனமும் அதிக வட்டி விகிதங்களால் பொருளாதார அழுத்தங்களை எதிர்கொண்டுள்ளது.
புடின் வெளியிட்ட சட்டக் கடிதத்தில், ஸ்டரோவொயிட்டை பதவி நீக்கம் செய்யப்படுவதற்கான காரணம் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
இவர் கடந்த 2024 மே மாதம் உக்ரைனுடன் எல்லை பகுதியான குர்ஸ்க் மாகாணத்தின் ஆளுநராக ஐந்தாண்டு சேவையை முடித்த பிறகு போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார்.
புதிய அமைச்சர்
நவ்குராட் மாகாணத்தின் முன்னாள் ஆளுநரான அந்த்ரெய் நிகிட்டின் தற்போது புதிய செயல் போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கிரெம்லினில் அந்த்ரெய் நிகிட்டின் புடினுடன் கைபிடித்து நின்ற புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கிரெம்லின் பேச்சாளர் திமித்ரி பெஸ்கொவ், ஸ்டரோவொயிட்டின் திடீர் நீக்கம் மற்றும் நிகிட்டின் விரைவான நியமனம் குறித்து பதிலளிக்கையில், “இந்த அமைச்சகம் மிக முக்கியமானது.
அதனால் அதற்குத் தேவையான அனுபவமும் தொழில்முறை திறனும் கொண்ட நிகிட்டின் இதனை சிறப்பாக நிறைவேற்றுவார் என ஜனாதிபதி கருதுகிறார்,” என்றார்.
