ஜோ பைடன் - ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்டவர்கள் மீது பொருளாதார தடை! - புடின் அதிரடி நடவடிக்கை
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உள்ளிட்ட 12 அமெரிக்க இராஜதந்திரிகள் பேருக்கு எதிராக பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
இந்தப் பட்டியலில் வெளியுறவுச் செயலர் ஆண்டனி பிளிங்கன், பாதுகாப்புச் செயலர் லாயிட் ஆஸ்டின், செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி மற்றும் நிர்வாக அதிகாரிகள் பலர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அனைவரும் ரஷ்யாவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களது சொத்துக்கள் ஏதேனும் ரஷ்யாவிற்குள் இருந்தால் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை அடுத்து அமெரிக்கா உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகள் ரஷ்ய ஜனாதிபதி புடின் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு எதிராக பொருளாதாரத்தடை விதித்தது.
அத்துடன் ரஷ்ய வங்கிகள் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களுக்கு தடைவிதிக்கப்பட்டது. இந்த நிலையில் பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு எதிராக ரஷ்யா பொருளாதாரத்தடை விதித்துள்ளது.
பாரக் ஒபாமா ஆட்சி காலத்தில் துணை ஜனாதிபதியாக இருந்த 2011-ம் ஆண்டுக்குப் பிறகு ஜோ பைடன் ரஷ்யாவுக்குச் செல்லவில்லை.
இந்நிலையில், ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம், வாஷிங்டனுடன் இன்னும் உத்தியோகபூர்வ உறவுகளைப் பேணுவதாகவும், தேவைப்பட்டால் பட்டியலில் உள்ளவர்களுடன் உயர்மட்டத் தொடர்பை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிராகவும் ரஷ்யா பொருளாதாரத் தடைகளை விதித்து வருவதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்கதக்து.