கொரோனா தடுப்பூசி குறித்த அறிவியல் தரவை இலங்கைக்கு வழங்க ரஷ்யா தயார்
ஸ்பூட்னிக் வி என்ற கொரோனா தடுப்பூசி குறித்த அறிவியல் தரவை இலங்கைக்கு வழங்க ரஷ்யா தயாராக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் சுகாதார அமைச்சு, ரஷ்யாவின் சுகாதார அமைச்சு மற்றும் ரஷ்யாவின் சுகாதார அமைச்சின் கமலேயா ஆராய்ச்சி தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையில் இணையம் மூலமான சந்திப்பு ஒன்றை ரஸ்யாவில் உள்ள இலங்கை தூதரகம் ஏற்பாடு செய்திருந்தது.
இதன்போது ரஸ்யாவின் ஸ்பூட்னிக் வி தடுப்பூசி பற்றி இலங்கை மற்றும் ரஸ்ய அதிகாரிகள் விரிவான விவாதித்தனர்.
தடுப்பூசி உற்பத்தியில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம், அதன் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் உட்பட்ட விடயங்கள் இதன்போது ஆராயப்பட்டன.
இலங்கையில் வைரஸ் மாற்றங்கள் மற்றும் இலங்கையின் நோய்த்தடுப்பு திட்டம் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி குறித்து ரஷ்ய நிபுணர்களுக்கு இலங்கை தரப்பு விளக்கமளித்தது.
இதன்போது தேவையான அனைத்து விஞ்ஞான தரவுகளையும் இலங்கையுடன் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருப்பதாக ரஸ்யத் தரப்பினர் தெரிவித்தனர்.
இந்த இணையக்கூட்டத்தில் இலங்கையின் தரப்புக்கு இலங்கையின் ரஸ்ய தூதர் பேராசிரியர் எம். டி. லமாவன்ச தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் ரஷ்யாவின் சுகாதார அமைச்சிலிருந்தும், கமலேயா ஆராய்ச்சி நிறுவனம் தொற்றுநோயியல் நிறுவனத்தில் இருந்தும் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.