டான்பாஸில் ரஷ்யா தீவிர தாக்குதல்
மரியுபோலில் சண்டை முடிவுக்கு வந்த நிலையில், கிழக்கு உக்ரைனில் விடியவிடிய ரஷ்யா குண்டுமழை பொழிந்துள்ளதுடன் டான்பாசில் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.
ரஷ்யா - உக்ரைன் இடையேயான 3 மாத போரில், தலைநகர் கீவ், 2வது பெரிய நகரம் கார்கிவ் போன்ற முக்கிய நகரங்களை முதலில் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த ரஷ்யா, பின்னர் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் ஆயுத உதவியால் உக்ரைனின் பதிலடியை சமாளிக்க முடியாமல் பின்வாங்கியது.
இந்நிலையில், மரியுபோல் துறைமுக நகரை முழுமையாக ரஷ்யா கைப்பற்றி உள்ளது. இங்குள்ள இரும்பு தொழிற்சாலையில் உள்ள பதுங்கு குழியில் சுமார் ஆயிரக்கணக்கான உக்ரைன் வீரர்கள் பதுங்கி, ரஷ்யா படைகளுக்கு எதிராக சண்டையிட்டு வந்தனர்.
இறுதியில் 1,000 வீரர்கள் சரணடைந்தனர். இதில் நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்து உள்ளனர்.
இவர்கள் அனைவரும் ரஷ்யா கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் போர் கைதிகளாக செஞ்சிலுவைச் சங்கம் பதிவு செய்துள்ளது.
ரஷ்ய கைதிகளை பரிமாற்றி, போர் கைதிகளாக உள்ள வீரர்களை உக்ரைன் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. தற்போது, இரும்பு தொழிற்சாலையும் ரஷ்யாவின் கட்டுப்பாட்டிற்குள் வந்ததால், மரியுபோலில் சண்டை முடிவுக்கு வந்துள்ளது.
வழக்கமாக, உக்ரைன் ராணுவம் சார்பில் வெளியிடப்படும் செய்தியில் மரியுபோல் தாக்குதல் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. கிழக்கு உக்ரைனை கைப்பற்ற மரியுபோல் முக்கிய இடமாக பார்க்கப்பட்டது.
தற்போது, அது ரஷ்யா வசமானதால், அடுத்து கிழக்கு உக்ரைனை கைப்பற்றுவதற்காக டான்பாஸ் பிராந்தியத்தில் தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கிறது.
பல இடங்களில் ரஷ்யாவின் தாக்குலை உக்ரைன் முறியடித்து உள்ளது. கிழக்கு உக்ரைனின பல நகரங்களில் விடியவிடிய ரஷ்யா குண்டுமழை பொழிந்தது. இதில், 6 பேர் கொல்லப்பட்டனர். 10க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து உள்ளனர்.