உக்ரைனின் ஆயுதக் கிடங்கைக் கைப்பற்றியதாக ரஷ்யா அறிவிப்பு
உக்ரைனின் கார்கிவ் ஆயுதக் கிடங்கைக் கைப்பற்றியதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
கார்கிவ் பகுதியில் உள்ள ஆயுதக் கிடங்கை ரஷ்ய இராணுவம் கைப்பற்றியதை அடுத்து, உக்ரைன் நாட்டுக்கு சொந்தமாக ஆயிரக்கணக்கான டன் வெடிமருந்துகள் இப்போது ரஷ்யாவின் கைகளில் இருப்பதாக கூறப்படுகிறது.
நாட்டின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கூற்றை டாஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தச் செய்தியின் சுயாதீன சரிபார்ப்பு எதுவும் மேற்கொள்ளப்படவில்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், முந்தைய நாள், ரஷ்யப் படைகள் அப்பகுதியில் தாக்குதலை நடத்த முயற்சிப்பதாக உக்ரைன் கூறியது. கார்கிவ் நகரிலேயே, திருமண மண்டபம் மற்றும் முக்கிய பாரபஷோவோ சந்தையைத் தாக்கியதாகவும், இதனால் உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும் உக்ரைன் தெரிவித்திருந்தது.
இதேவேளை, உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோல் நகரையும் ரஷ்யா கைப்பற்றியுள்ளது. தற்போது, நாட்டின் கிழக்கு பகுதிகளில் ரஷ்ய படையினர் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.