எரிவாயுவை எரித்து அழிக்கும் ரஷ்யா - அதிர்ச்சியில் ஐரோப்பிய நாடுகள்
ஐரோப்பாவும் ஏனைய பல நாடுகளும் எரிசக்தி நெருக்கடியில் சிக்கியிருக்க, ரஷ்யா தனது இயற்கை எரிவாயுவில் பெரும் பகுதியை எரித்து அழித்துவருகிறது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
பின்லாந்துடனான எல்லைப் பகுதியில் உள்ள ஆலைகளில் இருந்தே நாளொன்றுக்குப் பத்து மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பெருமளவு எரிவாயு எரித்து அழிக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது.
அது ஜேர்மனிக்கு விநியோகிக்கப்படவேண்டிய எரிவாயு என்று அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
எங்கேயும் விற்பனைக்கு விநியோகிக்க வழி இல்லாத காரணத்தினாலேயே ரஷ்யா அதன் எரிவாயுவை அழித்து வருகிறது என்று பிரித்தானியாவிற்கான ஜேர்மனியின் தூதர் தெரிவித்துள்ளார்.
சுற்றுச் சூழல் நிபுணர்கள் கவலை
அவ்வாறு பெருமளவில் எரிவாயு எரித்து அழிக்கப்படுவதால் வெளியேறுகின்ற காபன் (carbon dioxide) உட்பட ஆர்ட்டிக் பனிப்பாறைகளை உருகச் செய்கின்ற பதார்த்தங்களின் ஆபத்துக் குறித்து சுற்றுச் சூழல் நிபுணர்கள் கவலை வெளியிட்டிருக்கின்றனர்.
நாளொன்றுக்கு 4.34 மில்லியன் கன மீற்றர்(cubic metres) அளவுக்கு இயற்கை எரிவாயு அங்கு அழிக்கப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் சென்.பீற்றர்ஸ்பேர்க்கிற்கு வடமேற்கில் அமைந்துள்ள திரவமாக்கப்பட்ட எரிவாயு ஆலையில் (liquefied natural gas (LNG) plant) இருந்து வருகின்ற எரிவாயுவே இவ்வாறு எரித்து அழிக்கப்படுகிறது.
பின்லாந்து எல்லையில் வசிக்கின்றவர்கள் இதனை அவதானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.