ரஷ்யா மீண்டும் உக்ரைன் மீது தாக்குதல்
உக்ரைன் மீதான போரில் ரஷ்யா மீண்டும் ஒருமுறை தனது அதிநவீன 'ஒரேஷ்னிக்' (Oreshnik) அதிவேக ஏவுகணையை (Hypersonic Missile) ஏவித் தாக்குதல் நடத்தியுள்ளது.
நேட்டோ அமைப்பில் அங்கமாக உள்ள போலந்து நாட்டின் எல்லைக்கு மிக அருகே நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல், ஐரோப்பிய நாடுகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதல்
உக்ரைனின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள எல்விவ் (Lviv) நகரில் உள்ள ஒரு தொழிற்சாலையை இலக்கு வைத்து இந்த ஏவுகணை ஏவப்பட்டது.

உக்ரைனுக்கு ஆதரவாகத் துருப்புகளை அனுப்பப் போவதாக பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் அறிவித்த சில நாட்களிலேயே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
இது ஐரோப்பிய நாடுகளையும் அமெரிக்காவையும் அச்சுறுத்தும் ரஷ்யாவின் முயற்சி என உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா தெரிவித்துள்ளார்.
இதனிடையே தலைநகர் கீவ் மீது ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலில் ஒரு மருத்துவப் பணியாளர் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.
பதிலடியாக இந்தத் தாக்குதல்
மேலும், இந்தத் தாக்குதலால் கீவ் நகரின் பாதி பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. கடும் பனிப்பொழிவு மற்றும் -10 பாகை செல்சியஸ் உறைபனி நிலவும் சூழலில், மின்சாரம் மற்றும் குடிநீர் வசதியின்றி மக்கள் சுரங்கப்பாதைகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

கடந்த மாதம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் இல்லம் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்த முயன்றதாகக் கூறி, அதற்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக மொஸ்கோ தெரிவித்துள்ளது.
ஆனால், அத்தகைய தாக்குதல் எதுவும் ரஷ்யாவில் நடக்கவில்லை என உக்ரைன் மற்றும் அமெரிக்கா திட்டவட்டமாக மறுத்துள்ளன.
இதேவேளை மணிக்கு 13,000 கி.மீ வேகத்தில் பாயும் இந்த 'ஒரேஷ்னிக்' ஏவுகணையை இடைமறிப்பது சாத்தியமற்றது என ரஷ்யா கூறுகிறது.
இது அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்டது என்றாலும், இப்போதைய தாக்குதலில் வெடிபொருட்கள் இல்லாத போலி ஆயுதங்களே (Dummy Warheads) பயன்படுத்தப்பட்டதாக உக்ரைன் தரப்பு தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: சட்டென பணப்பெட்டியை எடுத்த கானா வினோத்! ஒட்டுமொத்த வீடும் கண்ணீரில் மூழ்கிய தருணம் Manithan
ரஷ்யாவுடன் இறுகும் போர்... பிரித்தானிய இராணுவத்திற்கு 28 பில்லியன் பவுண்டுகள் நிதி பற்றாக்குறை News Lankasri