கிராமிய விளையாட்டு கழகங்களும் பொருளாதார மேம்பாடும்: சிந்தனைத் தூண்டல்
இளைஞர்கள் ஒன்றிணைந்து இயங்கும் வலுவான அமைப்பாக விளையாட்டுக் கழகங்கள்
அமைகின்றன.
குடும்பப் பொருளாதாரம்,சமூகப் பொருளாதாரம்,மற்றும் நாட்டின் பொருளாதாரம் என்பன இந்த இளைஞர், யுவதிகளின் பொருளாதாரம் பற்றிய சிந்தனை வழியில் தங்கியிருக்கின்றது.
வலுவான பொருளாதார கொள்கைகள் நல்ல ஆரோக்கியமான நடைமுறைச் சாத்தியமான பொருளாதார சிந்தனைகள் மூலம் தோற்றம் பெறுகின்றன.
இளம் வயதிலிருந்து ஊட்டப்படும் எத்தகையதொரு கருத்தும் அவர்களிடத்தில் ஆழமாக பதிந்துகொள்ளும் போது அவர்களை அது சிந்திக்கத் தூண்டும்.அந்த சிந்தனை வழியில் நாளைய சமூகம் தோற்றம் பெறும் என்பது கண்கூடு.
இன்றைய இலங்கையின் விளையாட்டுக் கழகங்கள்
இலங்கையில் இன்று எல்லா விளையாட்டுக்களுக்கும் கழகங்கள் ஆக்கப்பட்டு அதனூடாக விளையாட்டுச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இளைய வயதில் உடலை கட்டுக்கோப்பாக பேணுவதற்கும் வெற்றி தோல்வியை சமமாக பேணுவதற்கும் விளையாட்டுக்கள் உதவுகின்றன.
இளையவர்களின் மனநிலையை ஒருமுகப்படுத்தி தவறான பழக்கங்களை தம் வழக்கங்களாக மாற்றிக் கொள்வதையும் இது தடுக்கின்றது.
ஆரோக்கியமான நாளைய சமூகத்தினை ஆக்குவதற்கு விளையாட்டுக்கள் உதவுகின்றன. எல்லா வகையான விளையாட்டுக்களும் கழகங்கள் ஊடாக முன்னெடுக்கப்படுகின்றன.
அதிகமான விளையாட்டுக்கழகங்கள் கிராமத்தினை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.கிராமத்தின் எல்லா இளைஞ யுவதிகளையும் கழகத்தின் பெயரால் ஒன்றினைத்துக் கொள்கின்றன.
ஒரு கழகத்தில் ஆண்களைக் கொண்ட அணி,பெண்களைக் கொண்ட அணி என இரு பெரும் பிரிவுகளை கொள்கின்றன. விளையாட்டுக்களுக்காக சமத்துவம் அடிப்படையில் அணிகளை பிரிக்கின்றனர்.
எடுத்துக்காட்டாக கால்ப்பந்து விளையாட்டில் ஆண்கள் அணி,பெண்கள் அணி என இரு அணிகளை ஒரு விளையாட்டுக்கழகம் கொண்டிருக்கின்றது.
விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கை அதிகமாகும் போது இந்த இரு பிரிவுகளிலும் மேலும் அணிகளை விரிவாக்கிக் கொண்டு ஆண்கள் கால்ப்பந்தணி A,B,C என இருப்பதனையும் குறிப்பிடலாம்.
அதிகமான விளையாட்டுக்கழகங்கள் பெண்களுக்கான அணிகளை கொண்டிருக்கவில்லை என்பது அவதானிப்பு. தலைவர்,செயலாளர், பொருளாளர், உறுப்பினர் என்ற நிர்வாக கட்டமைப்போடு நிதி நடவடக்கைகளை வங்கிக் கணக்குகளூடாகவும் நிர்வகிக்கினறன.
பல கழகங்கள் தங்கள் தொடர்ச்சியை பேணிக்கொள்வதன் மூலம் பழைமையையும் தக்கவைத்துக் கொண்டுள்ளன. படிமுறை வளர்ச்சியினூடாக பெயர் சொல்லுமளவுக்கு புகழ்பெற்றும் உள்ளன.
விளையாட்டினை மட்டுமே முதன்மைப்படுத்தி அவை செயற்பட்டு வருகின்றன. பெரும்பாலான விளையாட்டுக் கழகங்கள் தமக்கென எந்தவொரு வருமானம் தரும் தொழில்துறைகளையோ முதலீட்டு மையங்களையோ அவை கொண்டிருக்கவில்லை என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டும்.
தங்கம் வென்ற திருக்குமார்
இந்த கட்டுரையை வரைவதற்காக பல விளையாட்டு வீரர்களின் வாழ்வியல் அனுபவங்களை பெற்றுக்கொண்டு அவற்றுள் ஒருவரை எடுத்துக்காட்டுக்காக பயன்படுத்தப்படுவதற்கு முயற்சிக்கப்படுகின்றது என்பதை வாசகர்கள் கவனத்திற்கொள்ள வேண்டும்.
வெற்றியினால் புகழப்பட்ட இலங்கையின் வடபுல கிராமங்களைச் சார்ந்த விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை அதன் பின் பொருளாதார பலமற்ற தொழிலுக்காக பெரும் போராட்டங்களை அவர்கள் நடத்தவேண்டியிருப்பதனை கண்டு கொள்ள முடிந்தது.
அவர்களுக்கான ஆரோக்கியமான தீர்வினை யாரும் முன்வைக்கவில்லை.விளையாட்டு கழகம் மற்றும் துறைசார் வல்லுநர்களின் உதவிகள் அவர்களுக்கு கிடைக்கவில்லை.
தேவைக்கு பயன்படுத்திக் கொண்டுவிட்டு பின் கண்டும் காணாமல் இருந்து விடுக்கின்றனர் என்ற குற்ச்சாட்டினை பரவலாக எல்லோரும் முன்வைத்தமையும் சுட்டிக்காட்டப்பட வேண்டும்.
இன்றைய இலங்கையில் விளையாட்டுக்கள் மூலம் ஏனைய நாடுகளைப் போல திறமைகளை வெளிக்காட்டி விளையாட்டினை தொழில்முறை விளையாட்டுக்காக வீரர்களை தெரிவு செய்யும் களமாக தமிழர்களால் அதனை இலங்கையில் மேற்கொள்ள முடியாது என்ற உண்மை புரிந்து கொள்ளப்படுவதில்லை.
ஆயினும் தேசிய விளையாட்டணிகளில் இடம்பெறுவதனை ஒரு இலக்காக கொண்டு வீர வீராங்கனைகள் ஊக்குவிக்கப்படுகின்றனர். இது தவறான அணுகுமுறை என்று தெரிந்திருக்கும் பயிற்றுவிப்பாளர்களும் கூட அவற்றை தமிழ் விளையாட்டாளர்களுக்கு அறிவுறுத்துவதில்லை. இலங்கையின் தேசிய விளையாட்டணிகளில் ஏன் தமிழர்கள் இடம் பெறுவது அரிதானதாக இருக்கின்றது என்ற கேள்விக்கு விடையாக திறமையின்மை சுட்டிக்காட்டப்படுகிறது.
ஆயினும் இது உண்மையன்று. தேர்தல்களில் உள்ளது போன்ற விகிதாசார முறைகளின் மூலம் தெரிவுசெய்யப்பட்டாலும் ஒவ்வொரு அணியிலும் குறைந்தது ஒரு தமிழராவது இடம்பெற்றிருக்க வேண்டும்.
இது இன்னமும் சிந்திக்கப்படவில்லை. விளையாட்டு கழகங்களிடையே இந்த விடயம் பற்றிய சிந்தனை மேலோங்கவில்லை என்பதும் ஒரு அவதானமாக பெறப்பட்டது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
உடல் பலம் மற்றும் ஒற்றுமை பலம் என்ற அடிப்படையில் போட்டிகளில் பங்கெடுக்கும் போது தனிநபர் விளையாட்டுக்கள் திறமையினால் வெற்றி தீர்மானிக்கப்படுகின்றது.
அணி விளையாட்டுகள் ஒற்றுமை பலத்தை அடிப்படையாக கொண்டு புள்ளியிடல் மூலம் தீர்மானிக்கப்படுகின்றது. எப்படி வெல்ல முடிந்தாலும் வெற்றியோடு எங்கள் வாழ்வு அப்படியே மங்கிப் போகின்றது.
வெற்றியின் பின்னர் மீண்டும் தொடர்ந்து போட்டிகளில் பங்கெடுப்பதற்கான சூழல்கள் இல்லாது போகின்றன என விளையாட்டுக்கழகம் ஒன்றின் சார்பாக குத்துச்சண்டைப்போட்டியில் தென்னாசிய நாடுகளுடனான போட்டியில் பங்கெடுத்து தங்கம் வென்ற திருக்குமார் என்ற விளையாட்டு வீரர் தன்னிலையை எடுத்துரைத்திருந்தமையை இங்கே நோக்க வேண்டும்.
வெல்லும் வரை தோல்வி தான் வெற்றியின் முதற்படி என்று ஊக்கப்படுத்தும் எல்லோரும் வென்ற பின் அதனை தக்கவைத்துக் கொள்ளவோ அல்லது தொடர் வெற்றிகளை பெறவோ வழிகாட்டுவதில்லை என்ற குறையினை திருக்குமாருடனான கலந்துரையாடல் மூலம் அறிய முடிந்தது.
முல்லைத்தீவு மாவட்டத்தினை பிரிதிநித்துவப்படுத்தி தங்கம் வென்றிருந்த திருக்குமார் இப்போது கடற்தொழில் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றார் என்பதும் விளையாட்டில் தொடர்ந்து ஆர்வம் காட்டவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கு அவரது மனவடைவும் பொருளாதார வலுவின்மையுமே முதன்மை காரணங்களாக அமைவதனையும் நாம் கருத்திலெடுக்க வேண்டும்.
நீண்ட காலத்தினை விளையாட்டில் செலவிட்ட திருக்குமாருக்கு இப்போது வாழ்க்கைக்கான செலவுகளை மேற்கொள்வதற்கான பணத்தினை பெற்றுக்கொள்ள தொழில் தேவையாகின்றது.
தொழிற்சாலையை கைவிட்ட விளையாட்டுக்கழக செயலாளர்
முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகளவில் கால்பந்து விளையாட்டில் பங்கெடுத்து வெற்றிகளை சூடும் விளையாட்டுக் கழம் ஒன்றின் செயலாளர் தன் தொழிற்சாலை முயற்சிகளை கைவிட்டுள்ளார்.
அரச அலுவலகராகவும் அவர் இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்ட காலம் இயங்கிய அந்த தொழிற்சாலை பலருக்கு வேலை வாய்ப்புக்களை கொடுத்திருந்ததோடு அந்த ஊரில் அதிகளவில் கிடைக்கும் மூலப்பொருளை அடிப்படையாக கொண்டு நடைபெற்ற இடைநிலை மூலப்பொருள் உற்பத்தித் தொழிற்ச்லையாகும்.
இயந்திரங்களையும் கொண்டிருந்த போதியளவு தொழிலாளர்களை கொண்டிருந்த தொடர்ந்து முன்னெடுப்பதற்கு சாதகமான சூழல்களை கொண்டிருந்த போதும் சிறந்த திட்டமிடல் இல்லாமையினாலேயே அந்த தொழிற்சாலை கைவிடப்பட்டதாக அறிய முடிகின்றது.
அதனை முன்னெடுத்திருந்த அந்த விளையாட்டுக்கழக செயலாளருக்கு போதியளவு வருமானம் அரச ஊழியத்தின் மூலம் பெறப்படுகின்றமையும் சிறந்த நிர்வாக ஆளுமையின்மையுமே தொழிற்சாலை மூடப்பட்டதற்கான காரணமாக அமைந்திருக்கின்றது.
ஆயினும் நட்டம் காரணமாக மூடப்பட்டதாக காரணம் செல்லப்படுவதாக அந்த ஊரின் மற்றொரு தொழில் முயற்சியாளர் குறிப்பிட்டிருந்தார். அந்த விளையாட்டுக் கழகத்தில் அங்கம் வகிக்கும் மற்றொரு விளையாட்டாளரின் தந்தையும் இந்த தொழிற்சாலையின் முடிவுப் பொருளை கொண்டு கயிறு மற்றும் தும்புத்தடிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை முன்னர் நடத்தி வந்திருந்தார்.
இந்த இருவரும் இப்போது அந்த தொழிற்சாலைகளை மீளவும் இயக்கினால் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதோடு அந்த கிராமமும் பொருளாதார மேம்பாட்டையும் என்பது நோக்கத்தக்கது.அத்தோடு வளர்ந்து வரும் இளையவர்களுக்கு தொழில் பயிற்சிகளையும் வழங்கலாம் என்பது சமூக ஆர்வலர்கள் பலரின் முன் வைப்புக்களாக இருக்கின்றன.
இது போல் பல கிராமங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பல விளையாட்டுக்கழகங்கள் பல தொழில் முயற்சிகளை பொறுப்பாக முன்னெடுக்க கூடிய சூழல்கள் இருந்த போதும் விளையாட்டுக்கு கொடுக்கும் முன்னுரிமை போல் தொழிலுக்கு முன்னுரிமை கொடுக்காதிருப்பதனை அவதானிக்க முடிகின்றது.
எனினும் சில விளையாட்டுக்கழகங்கள் சிறந்த தொழில் முயற்சியாளர்களையும் அவர்களின் சிறந்த தொழிற்றுறைகளையும் கொண்டுள்ளமையையும் மறுக்க முடியாது. ஆனாலும் அவை அவர்கள் அங்கம் வகிக்கும் விளையாட்டுக்கழகங்களின் முயற்சியினால் ஆக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
பொருளாதார மேம்பாட்டில் விளையாட்டுக்கழகங்களின் பங்கு
விளையாட்டு கழகங்களை இரண்டு பிரதான வகைகளாக இப்போது நோக்க வேண்டும்.
01) கிராமங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கழகங்கள்
02) நகரங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கழகங்கள் இந்த போக்கு பிராந்திய பொருளாதார பலத்தை அடிப்படையாக கொண்டது.
பொதுவாகவே நகரங்கள் பொருளாதார வளமிக்கனவாக அல்லது பொருளாதார பலமிக்க மனிதர்களை கொண்டதாக இருக்கின்றன. அத்தகைய சூழலில் உள்ள குடும்பங்களில் இருந்து வந்த விளையாட்டு வீரர்களின் விளையாட்டு என்பது பொழுது போக்கை அடிப்படையாக கொண்டிருப்பதை முதன்மைப்படுத்துகின்றது.
ஒரு சிலரே விளையாட்டை தொழில் முறையாக மேற்கொள்ள களமாடுகின்றனர்.அவர்களது மேம்பட்ட கல்வியறிவு ஒரு நாட்டின் விளையாட்டுத்துறையை எத்தனை தொழில்முறை விளையாட்டாளர்களை உள்வாங்கும் என்ற பொதறிவை அவர்களுக்கு வழங்கிவிடுகின்றது.
கிராமங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் விளையாட்டுக்கழகங்கள் அவ்வாறில்லை. பொருளாதார பலம் மிகவும் குறைந்தவை. இன்றைய கிராமிய விளையாட்டு கழகங்கள் பல நன்கொடையாளர்களின் உதவியை நம்பியே நடைபோடுகின்றன. விளையாட்டு வீரர்களின் சீருடை மற்றும் பயனச் செலவுகளும் உள்ளிட்ட எல்லா விடயங்களும் உதவி மூலமே நகர்த்தப்படுகின்றது.
இரவு விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ள விளையாட்டு மைதானங்களை கொண்ட கழகங்களும் இருக்கின்றன. இங்கே சிந்திக்க வேண்டிய விடயம் மின் கட்டண உயர்வின் போது அதனை செலுத்த சிரமங்களை எதிர்கொள்ளும் மக்கள் இருக்கும் போது விளையாட்டு கழகங்கள் எப்படி அதனை எதிர்கொள்ளகின்றன என்பதாகும்.
சில விளையாட்டு வீரர்களின் வீடுகள் வீட்டுப் பொருளாதாரத்திற்காக அம்மா உழைக்கப் போகும் போக்கும் இருக்கின்றது.இந்த விளையாட்டு வீரர்கள் வீட்டுச் சூழலை கருத்திலெடுக்காது விளையாட்டை பற்றி மட்டுமே சிந்தித்துச் செயற்படுகின்றனர்.
வேலைக்குச் சென்று வருமானம் ஈட்டியவாறு விளையாடப் போகாத அவர்கள் விளையாட மட்டுமே போகின்றமையையும் அவதானிக்க முடிகின்றது.
என்ன செய்யலாம்?
இளைஞர்களும் யுவதிகளும் ஒன்றுதிரளும் விளையாட்டு கழகமொன்றினால் ஏன் பொருளாதார முயற்சிகளில் ஈடுபட முடியாது என்ற கேள்வி மேலெழுகின்றது. சுமார் இருபது விளையாட்டுக்கழகங்களில் மேற்கொண்ட தேடலில் பொதுத்தன்மையுடைய செயற்பாடுகளை அவதானிக்க முடிகின்றது.
01) விளையாட்டுக்களில் வீரர்களை ஈடுபட ஊக்குவித்தல்
02) விளையாட்டால் வாழ்வை வளமாக்கலாம் என்ற எண்ணக்கருவை உருவாக்குதல்
03) விளையாட்டில் வெல்வது கிராமத்திற்கு பெருமை சேர்ப்பது என்பது
04)ஒருங்கிணைந்து பொதுப்பணியாற்றுவது என்ற அடிப்படைச் செயற்பாடுகளை அவர்கள் முன்னெடுப்பதனை சுட்டிக்காட்டல் பொருத்தமானது.
இலங்கையில் கோத்தபாய ராஜபக்ச ஆட்சிக்கு வந்த போது நாட்டில் உள்ள எல்லா சுவர்களையும் சித்திரங்களால் திரையிடுவதற்கு முன்மொழிந்தபோது இளைஞர் குழுக்கள் அதனை செயற்படுத்தின.
அது போல் நாமல்ராஜபக்சவினால் பத்தாயிரம் கட்டில்களை உற்பத்தி செய்து கோவிட் -19 தீவிர நிலையின் போது வைத்தியசாலைகளுக்கு வழங்குதல் என்ற செயற்பாடு முன்மொழியப்பட்டது.இது அன்று இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இவையெல்லாம் சிறப்பாக முன்னெடுக்கப்பட்ட போதும் அவை தொடர்ச்சியை பேணவில்லை. ஆயினும் இவற்றை அடிப்படையாகக் கொண்டு நோக்கினால் ஏன் இதே போலவே பொருளாதார அபிவிருத்திக்கு விளையாட்டுக்கழகங்களை பயன்படுத்துவதற்கு முன்மொழியப்படவில்லை? விளையாட்டுக்கழகங்களும் அது பற்றி ஏன் சிந்திக்கவில்லை?
முன்மொழியப்படும் செயற்பாடுகள் செயல் வடிவமெடுக்கும் போது அவை தொடர்ந்து முன்னெடுக்கபட வேண்டும்.
விளையாட்டுக்கழகங்கள் பலவற்றின் வீரர்களிடம் இது தொடர்பாக நேரடியாகவும் மறைமுகமாகவும் கேட்கப்பட்ட போது அவர்களிடம் பொருளாதார முயற்சிகளில் ஈடுபட ஆர்வம் இருப்பதனையும் ஆயினும் அது தொடர்பான எத்தகைய அறிவுசார் சிந்தனைகளோ அன்றி முயற்சிகளோ அவர்களிடம் இல்லை என்பதனை அறிய முடிகின்றது.
இது கவலைக்குரிய விடயமாகும். ஒவ்வொரு விளையாட்டு கழகமும் தங்கள் கழக உறுப்பினர்களில் வேலையற்றிருப்போரையும் குறைந்த வருமானமுள்ளோரையும் இணைத்து புதிய தொழில் முயற்சிகளை முன்னெடுத்தால் வருமானம் திரட்டப்படுவதோடு விளையாட்டுச் செயற்பாடுகளுக்காக உதவிகளை எதிர்பார்க்கும் நிலையும் இருக்காது.
இத்தகைய தொழில் முயற்சிகள் வெற்றியடையுமாக இருந்தால் முல்லைத்தீவு மாவட்டத்தின் குமுழமுனை கிராமம் போல் மக்களின் முயற்சியினால் கிராம அபிவிருத்திப் பணிகளுக்காக அரச உதவிகளால் முழுமையாக தங்கியிருக்கும் நிலை இருக்காது.
அவர்களிடமுள்ள முயற்சியினால் முத்தையன் சந்தி பிள்ளையார் கோவில் மற்றும் கொட்டுக் கிணற்று ஆலயமும் அதன் கேணியின் புனரமைப்புக்களையும் சுட்டிக்காட்ட முடியும். பொருளாதார முயற்சி வெற்றியளிப்பதற்கு விளையாட்டுக்கழகங்கள் சிந்திக்க தலைப்பட்டல் வேண்டும்.
01) வருமானங்கள் பெறும் வழிமுறைகளை கண்டு நடைமுறைப்படுத்தல்
02) செலவுகளை குறைத்து சேமிப்புக்கள் மூலம் பொருளாதார பலம் பெறுதல்
03) வருமான வழிகளுக்கான புதிய வழிமுறைகளை தேடலும் நடைமுறைப்படுத்தலும் போன்ற செயற்பாடுகளை முன்னெடுத்தபடி தங்கள் விளையாட்டுச் செயற்பாடுகளை நகர்த்திச் செல்லல் நன்மை பயக்கும் என்பது திண்ணம்.
தனிநபர் வருமான மேம்பாடு சமூக பொருளாதார பலத்தை மேம்படுத்தும். சமூக பொருளாதார மேம்பாடு நாட்டின் பொருளாதாரம் மேம்பட உதவும் என்பது நோக்கத்தக்கது.
விளையாட்டுக்கழகங்கள் தங்கள் கிராமங்களில் உள்ள மனித வளத்தையும் இயற்கை வளங்களையும் உச்சளவில் பயன்படுத்திக்கொள்ள முயல வேண்டும்.
பல கிராமங்களின் வளங்கள் பயன்படுத்தப்படாதிருப்தும் அவற்றை குறைந்த விலைக்கு விற்பதும் அவதானிக்கப்பட்ட விடயமாக பலரால் சுட்டிக்காட்டிய போதும் உருப்படியான முயற்சிகள் முயற்சிக்கப்படவில்லை.
பல கிராமங்களில் மக்களின் சிறந்த குடும்பப் பொருளாதார திட்டமிடலின்மையால் வறுமை அவர்களிடம் சேர்வதும் நோக்கப்பட்டது. இவற்றை கருத்திலெடுத்து மக்களிடையே விழிப்புணர்வை விளையாட்டுக் கழகங்கள் முன்னெடுக்கலாம்.
இனிவரும் காலங்களில் விளையாட்டுத் துறை சார்ந்தோர் தங்கள் திட்டமிடல்களில் விளையாட்டு வீரர்களின் தனிநபர் வருமானமீட்டல்களையும் கருத்திலெடுத்து செயற்பட்டு பொருளாதார பலமுள்ள நாளைய சமூகத்தினை விளையாட்டுக் கழகங்களினூடாக நிறௌவேற்ற முற்பட வேண்டும்.
நடந்தால் மகிழ்ச்சி; இல்லை நெகிழ்ச்சியோடு இந்த வாழ்வை கடந்து நடந்திட வேண்டியது அவசியமாகும்.