மக்களின் ஆணைக்கு அமைய ஆட்சி செய்யுங்கள்! மெடில்லே பஞ்ஞாலோக்க தேரர்
அநுராதபுரத்தில் ஞானக்கா என்ற சாஸ்திரம் கூறும் பெண்ணுக்கு தேவையான விதத்தில் அல்லாது மக்களின் ஆணைக்கு அமைய நாட்டை நிர்வாகம் செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாக சிங்களே அமைப்பின் செயலாளர் மெடில்லே பஞ்ஞாலோக்க தேரர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்திற்கு எதிரில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வைத்து ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில்,
அரசாங்கம் அடக்கம் செய்ய போகிறதா அல்லது அரசாங்கம் தன்னை அடக்கம் செய்து கொள்ள போகிறதா என்பதை கேட்கவே பௌத்த பிக்குகளாகிய நாங்கள் இந்த இடத்திற்கு வந்திருக்கின்றோம்.
ஒரே சட்டம் எனக் கூறி ஆட்சியை பெற்றுக்கொண்டுள்ளதால், அநுராதபுரம் ஞானக்காவுக்கு தேவையான விதத்தில் அல்லாது மக்களின் ஆணைக்கு அமைய நாட்டை ஆட்சி செய்யுங்கள் என்று ஜனாதிபதிக்கு கூறுகிறோம்.
பௌத்த பிக்குமார் வீதியில் இறங்கியமை குறித்து அரசாங்கமும் ஜனாதிபதியும் வெட்கப்பட வேண்டும்.
இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர ஆர்ப்பாட்டங்களை நடத்தி வழக்குகளை எதிர்கொண்ட பிக்குமாரே இங்கு அதிகமாக இருக்கின்றோம்.
நாங்கள் இவ்வாறு வீதிக்கு வந்து அலைய விட்டுள்ளமை, வீதியில் இறக்கியமை என்பன இந்த அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது என்பதற்கான மிகப் பெரிய உதாரணம் எனவும் மெடில்லே பஞ்ஞாலோக்க தேரர் குறிப்பிட்டுள்ளார்.