தேசியப் பாதுகாப்பு என்ற போர்வையில் தகவல் வழங்கலை மறுக்க முடியுமா? மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
தேசியப் பாதுகாப்பு என்ற போர்வையில் நிதி முறைகேடுகளையோ அல்லது நிர்வாக நடவடிக்கைகளையோ மறைக்க முடியாது என்பதற்கான ஒரு வலுவான தீர்பபை முன்னுதாரணமாக காட்டி அதை மிகச் சிறப்பாகப் பகுப்பாய்வு செய்த சட்டத்தரணி சுரேன் டி. பெரேரா HUMAN RIGHTS LAW CHAMBERS தொகுப்பில் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அதில் அவர் எழுதிய முழுமையான குறிப்பு. இலங்கை கடற்படைக்கு ஏ. ஏ. எம். ரிப்தி அலி சமர்ப்பித்த தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்ட விபரங்களை தரமறுத்து கடற்படை தாக்கல் செய்த மேன் முறையீட்டு வழக்கிலேயே இந்த தீர்ப்பு 2026 மார்ச் 19 திகதி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படைக்கு எதிரான தீர்ப்பு
RTI கோரிக்கையை இலங்கை கடற்படை சட்டத்தின் பிரிவு 5(1) (ஆ) (i)-இன் அடிப்படையில் அதாவது அது தேசியப் பாதுகாப்பிற்குப் அச்சசுறுத்தல் என்ற அடிப்படையில் இந்தத் தகவல் கோரிக்கையை அடியோடு நிராகரித்தது.
அதன்படி தகவல் கோரியவர் இதை தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவிடம் மேன்முறையீடு செய்தார்.
2023-ஆம் ஆண்டில் அந்த மேன்முறையீட்டு விசாரணையின் மீதான தனது தீர்ப்பில் ஆணைக்குழு குறித்த சில தகவல்களை கடற்படை வழங்கப்பட வேண்டும் என்றும் ஏனைய தகவல்கள் குறித்த கடற்படையின் நிலைப்பாடு சரியானது என்றும் முடிவு செய்தது.
இந்தத் தீர்ப்புக்கு எதிராக கடற்படை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஒரு மேன்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கடற்படையால் முன்வைக்கப்பட்ட முக்கிய வாதங்களில் ஒன்று இலங்கையின் தேசியப் பாதுகாப்பு தொடர்பான தகவல்களை வெளியிடுவதை ஒரு குற்றச் செயலாக கருதும் 1955-ஆம் ஆண்டின் அரச இரகசியங்கள் சட்டம் எண் 32-இன் கீழ் தகவலை வழங்க மறுத்ததாக வாதிட்டது.
இருப்பினும் மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த வாதத்தை நிராகரித்து தனது தீர்ப்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) பிரிவு 4-ஐ உறுதி செய்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஏனைய சட்டங்களை விட மேலோங்கி நிற்கிறது என்று கூறியது.

இந்தத் தீர்ப்பின் மூலம் கருத்துச் சுதந்திர உரிமை மற்றும் தகவல் பெறும் உரிமை ஆகியவை முறையான தேசியப் பாதுகாப்புக் காரணங்களுக்காக மட்டுமே கட்டுப்படுத்தப்பட முடியும் என்பதைத் தெளிவுபடுத்தும் சர்வதேச சட்டத் தரமான ஜோகன்னஸ்பர்க் கோட்பாடுகளை முதன்முறையாக இலங்கைச் சட்டத்தில் இணைக்கவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு இலங்கையில் தகவல் அறியும் உரிமையை (RTI) ஒரு படி மேல் நிலைக்கு உயர்த்தியுள்ளது.
மேலும் அதன் மிக முக்கியமான சாதனை மற்ற அனைத்து சட்டங்களுக்கும் மேலாக தகவல் சட்டத்தை நிறுவியதாகும்.
ஆரகலய போராட்டத்தில் போது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய கடற்படை கப்பலில் தப்பிச் சென்றமை தொடர்பில் 8 குறிப்பிட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தத் தகவல் கோரிக்கையானது கப்பலில் ஏறியதற்கான சான்றிதழ் கப்பலின் பெயர் செலவழித்த நேரம் மற்றும் பயணித்த இடங்கள் அவருடன் இருந்த மற்ற நபர்களின் பெயர்கள் கடற்படையால் செய்யப்பட்ட மொத்த செலவினம் மற்றும் பணம் செலுத்தியவர் யார் போன்ற தகவல்களே கோரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.