சுகாதார அமைச்சின் திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரி நியமனம்
நாட்டின் சுகாதார சேவைகளை மாவட்ட மட்டத்தில் வலுப்படுத்தும் நோக்கில், சுகாதார அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சருக்கான திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரியாக நாடாளுமன்ற உறுப்பினராக ரொஷான் அக்மீமன நியமிக்கப்பட்டுள்ளார்.
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நலிந்த ஜெயதிஸ்ஸவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைய, நாடளாவிய ரீதியில் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் ஒருங்கிணைப்பு அதிகாரிகளாக ஒரு குழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சுகாதார தர மேம்பாட்டுத் திட்டம்
மத்திய அரசுக்கும் மாகாண சபைகளுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு இடைவெளிகளைக் குறைத்து, தடுப்பு மற்றும் சிகிச்சை சேவைகளை மிகவும் திறமையாக மக்களிடம் கொண்டு சேர்ப்பதே இந்த நியமனத்தின் முக்கிய நோக்கமாகும்.
இதுவரை நிலவி வந்த நிர்வாக ரீதியான சிக்கல்கள் மற்றும் வளப்பயன்பாட்டு குறைபாடுகளைக் களைவதற்கு இந்த புதிய கட்டமைப்பு வழிவகுக்கும் என அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

மாவட்ட அளவிலான சுகாதாரத் தேவைகளைக் கண்டறிந்து, அவற்றுக்கு முன்னுரிமை அளித்தல், தேசிய மற்றும் மாகாண சுகாதாரத் திட்டங்களை ஒருங்கிணைத்தல், வளங்களைச் சரியான முறையில் பயன்படுத்துவதை உறுதி செய்தல், நடைபெற்று வரும் திட்டங்களின் முன்னேற்றத்தைக் கண்காணித்து காலக்கெடுவுக்குள் முடிக்க உதவுதல் மற்றும் பொதுமக்களின் பங்கேற்புடன் பிராந்திய சுகாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணல் ஆகிய பொறுப்புக்கள் நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரிகளுக்குப் வழங்கப்பட்டுள்ளன.
இந்த புதிய பொறிமுறையின் மூலம் சுகாதார சேவைகளின் தரம் மேம்படுத்தப்பட்டு, மக்களுக்கு மிகவும் நம்பகமான மற்றும் வசதியான சுகாதார வசதிகள் கிடைப்பதை உறுதி செய்ய முடியும் என சுகாதார அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்பு அதிகாரி
இதே வேளை, யாழ்ப்பாணம் மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்பு அதிகாரியாக நாடாளுமன்ற உறுப்பினர் ச.ஸ்ரீபவானந்தராசா நியமிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர், டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவினால் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தப் புதிய முறையின் மூலம் சுகாதார சேவைகளின் தரத்தை மேம்படுத்தி வினைத்திறனான சேவையை வழங்குவதை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு பிரதான நோக்கமாக கொண்டுள்ளது.

மத்திய அரசுக்கும் மாகாண சபைகளின் கட்டுப்பாட்டில் உள்ள சுகாதார சேவை நிறுவனங்களுக்கும் இடையே தற்போதுள்ள ஒருங்கிணைப்புக் குறைபாடுகளைக் களைவதன் மூலம், மேலும் திறமையான சேவைகளை மேம்படுத்துவதே இந்த நடவடிக்கையின் முதன்மை நோக்கமாகும்.
மேலும், முந்தைய அமைப்பின் கீழ், உள்ளூர் மட்டத்தில் சுகாதாரப் பிரச்சினைகளை முறையாகக் கண்டறிவதிலும், அவற்றை தேசியத் திட்டங்களில் இணைப்பதிலும் சில நடைமுறைச் சிக்கல்கள் எழுந்துள்ளன.
இவ்வாறு நியமிக்கப்பட்ட மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகள் மற்றும் பொறுப்புகளும் முன்மொழியப்பட்டுள்ளன.
பொறுப்புக்கள்
மாவட்ட அளவில் சுகாதாரத் தேவைகளைக் கண்டறிந்து, பொதுமக்களின் பங்கேற்புக்கு முன்னுரிமை அளித்தல். அந்தத் தேவைகளைத் தேசிய மற்றும் மாகாண சுகாதாரத் திட்டங்களுடன் ஒருங்கிணைக்க உதவுதல்.

வளங்களின் திறமையான பயன்பாட்டையும், துறைசார் மற்றும் மாகாண சுகாதார நிறுவனங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பையும் வலுப்படுத்துதல்.
அமைச்சின் கொள்கைகளுக்கு இணங்க பிராந்திய வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதை ஒருங்கிணைத்தல் முன்னுரிமைத் திட்டங்களைக் கண்டறிந்து அவற்றை அமைச்சகத்திற்குப் பரிந்துரைத்தல்.
தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் முன்னேற்றத்தைக் கண்காணித்து, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் அவற்றை வெற்றிகரமாக முடிக்க உதவுதல் உள்ளிட்ட பணிகளும் பொறுப்புக்களும் வழங்கப்பட்டுள்ளன.
மேலதிக தகவல்கள் - தீபன்