நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியில் நீடித்திருந்தால் இலங்கையையே விற்பனை செய்திருக்கும் என குற்றச்சாட்டு
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியில் நீடித்திருந்தால் ஒட்டுமொத்த இலங்கையையே விற்பனை செய்திருக்கும் என அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன (Rohitha Abeygunawardena) தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் ஆளும் எதிர்க்கட்சிகளுக்கு இடையில் கடுமையான வாதப் பிரதிவாதங்கள் இன்று நாடாளுமன்றில் இடம்பெற்றன.
இதன்போது ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிற்கு விற்பனை செய்யப்படவில்லை என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்பனை செய்து விட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க (Tissa Attanayake) குற்றம் சுமத்தியிருந்தார்.
நாட்டின் பிரதான சொத்துக்களில் ஒன்றாக துறைமுகத்தை இவ்வாறு விற்பனை செய்தமை கண்டிக்கப்பட வேண்டியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், துறைமுகம் விற்பனை செய்யப்படவில்லை எனவும், 70 ஆண்டுகளுக்கு சீன நிறுவனமொன்று துறைமுகத்தை முகாமைத்துவம் செய்யும் எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
தேவை ஏற்பட்டால் எந்த நேரத்திலும் இந்த உடன்டிக்கையை ரத்து செய்துவிட்டு நட்டஈட்டை வழங்கி துறைமுகத்தை மீளப் பெற்றுக் கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு நிறுவனங்களுக்கு 33 ஆண்டுகளுக்கு மேல் குத்தகைக்கு விடப்படும் சொத்துக்கள் யதார்த்தத்தில் விற்பனை செய்யப்பட்டதாகவே அர்த்தப்படும் என திஸ்ஸ அத்தநாயக்க பதிலளித்துள்ளார்.
இந்த நிலையில், நல்லாட்சி அரசாங்கம் 99 ஆண்டுகளுக்கு துறைமுகத்தை குத்தகைக்கு விட்டுள்ளது என இந்த வாதப் பிரதிவாதங்களில் பங்கேற்ற துறைமுக விவகார அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
நாம் நினைத்தவாறு உடனடியாக துறைமுகத்தை மீளப் பெற்றுக் கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நல்லாட்சி அரசாங்கம் தொடர்ந்தும் நீடித்திருந்தால் முழு இலங்கையையும் விற்பனை செய்திருக்கும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.