ரோஹண விஜேவீரவின் குடும்பத்திற்கு முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச செய்த அநியாயங்கள் : மகன் வெளியிட்ட தகவல்கள்!
ஜே.வி.பியின் முன்னாள் தலைவர் ரோஹண விஜேவீரவின் குடும்பத்தினரை 48 நாடுகள் அழைத்துச் சென்று சகல வசதிகளையும் வழங்க முன்வந்தபோதும் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச தனது நிறைவேற்றதிகாரத்தை பயன்படுத்தி அவை அனைத்தையும் தடுத்ததாக ரோஹண விஜேவீரவின் மகன் உவிந்து விஜேவீர தெரிவித்துள்ளார்.
வலையொளி தளமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்துரையாற்றிய அவர், நாங்கள் கணேமுல்ல முகாமில் இருந்தபோது அம்மாவும் எம்மீது அன்புகாட்டியவர்களும் அப்பாவின் ஆதரவாளர்களும் எங்களை வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்ல நிறைய முயற்சி செய்தார்கள்.
பல வெளிநாட்டுத் தூதரகங்கள் இதில் தலையிட்டன. எனக்குத் தெரிந்தவரையில் 13 நாடுகள் இலங்கை அரசாங்கத்திடம் எங்களை ஒப்படைக்குமாறு கேட்டிருந்ததாகப் பின்னர் எங்களுக்குத் தெரியவந்தது.
பிரேமதாசவின் அதிகார அழுத்தம்
எங்களுக்கு முழுப் பாதுகாப்பையும் கல்வியையும் வழங்குவதாக தெரிவித்திருந்தனர். அரசியல் புகலிடம் வழங்கப்பட்டால் ஓய்வூதியம் கூட வழங்குவார்கள்.
அப்படி முழுமையான பாதுகாப்புடன் 13 நாடுகள் எங்களைக் கேட்டிருந்தன. 43க்கும் மேற்பட்ட நாடுகள் விசாரித்திருந்ததாகவும் சுமார் 48 நாடுகள் வரை விசாரித்து 13 நாடுகள் எங்களை ஏற்றுக் கொள்ளச் சம்மதம் தெரிவித்திருந்ததாகவும் சொல்லப்பட்டது.
ஆனால் ஜனாதிபதி பிரேமதாச எங்களைப்போக அனுமதிக்கவில்லை. தனது அதிகாரமிக்க தன்னிச்சையான முடிவினால் எங்களைத் தடுத்து வைத்திருந்தார். அந்த நேரத்தில் அம்மாவின் அண்ணன் ஒருவர் இருந்தார். டாக்டர் சந்திராபானு என்று.

அவரும் ஒரு சர்ச்சைக்குரிய நபர். அவரும் எங்களை விடுவிப்பதற்காக வந்தார். அந்த நேரத்தில் சர்வதேச அளவில் அரசாங்கத்திற்கு வந்த முக்கிய அழுத்தம் கல்வி தொடர்பானது.
அதாவது கல்வி என்பது எவராலும் மறுக்க முடியாத அடிப்படை உரிமை. அதனால் இந்த குடும்பத்தின் குழந்தைகளுக்குக் கல்வி இல்லை என்பதால் இவர்களை முகாமில் இருந்து விடுவித்து வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறு கேட்டார்கள்.
அதற்கு ஜனாதிபதி பிரேமதாச சம்மதிக்கவில்லை. அப்போது கணேமுல்ல என்பது கொழும்புக்கு மிக அருகில் உள்ளது. அதனால் கணேமுல்ல முகாமிற்கு முன்னால் மனித உரிமைகள் அமைப்புகள் அடிக்கடி வரும்.

தூதரக அதிகாரிகள் வருவார்கள். அப்பாவின் ஆதரவாளர்கள் வருவார்கள். அதுவும் அவர்களுக்கு ஒரு தொல்லையாக மாறியது. அதனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் மோதல்கள் நிலவிய திருகோணமலைப் பகுதிக்கு எங்களை அனுப்ப ஜனாதிபதி தீர்மானித்தார்.
அந்தக் காலக்கட்டத்தில் எனக்கு அப்போது இரண்டு அல்லது மூன்று வயது இருக்கும் என குறிப்பிட்டிருந்தார்.