மொஜ்தபா கமேனியின் உடல்நிலை குறித்து பரபரப்பு: ஈரான் ஜனாதிபதியுடன் முக்கிய சந்திப்பு
ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான், உச்சத் தலைவர் அயத்துல்லா மொஜ்தபா கமேனியை சமீபத்தில் சந்தித்ததாக உச்சத் தலைவரின் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு போர் தொடங்கிய பின்னர், உச்சத் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்ட மொஜ்தபா கமேனி பொதுவெளியில் தோன்றாத நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணை திறந்தால் ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை கைவிட ட்ரம்ப் தயார்..! வெளியான அதிரடி அறிவிப்பு
அயத்துல்லா மொஜ்தபா கமேனி
“ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான், தனது பதவிக்காலத்தின் மூன்றாவது ஆண்டின் தொடக்கத்தில் அயத்துல்லா மொஜ்தபா கமேனியை சந்தித்து அவருடன் கலந்துரையாடினார்” என உச்சத் தலைவரின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், இந்த சந்திப்பு எப்போது நடைபெற்றது என்பது குறித்த தகவல் வெளியிடப்படவில்லை. 2024 ஜூலை மாதம் ஜனாதிபதியாக பதவியேற்ற பெசெஷ்கியான், கடந்த மே மாத தொடக்கத்தில் கமேனியை சந்தித்ததாக ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
ஆனால், அப்போது உச்சத் தலைவரின் அலுவலகம் இதுகுறித்து எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. கடந்த புதன்கிழமை, கமேனியுடன் தற்போது தொடர்புகொள்வது “மிகவும் கடினமாக உள்ளது” என பெசெஷ்கியான் தெரிவித்திருந்தார்.
ஈரான் போர்
இதற்கிடையில், அவரது தந்தையை கொன்ற தாக்குதல்களில் மொஜ்தபா கமேனியும் காயமடைந்ததாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து, அவரது உடல்நிலை குறித்து பல்வேறு ஊகங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், ஜனாதிபதியும் உச்சத் தலைவரும் நாட்டின் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்து விரிவாக கலந்துரையாடியதாகவும், குறிப்பாக தற்போதைய இராணுவ நிலைமை மற்றும் எதிர்கால நிலவரங்கள் குறித்து பேசியதாகவும் உச்சத் தலைவரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஈரான், போரை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தது.
உச்சத் தலைவர் சந்திப்பு
ஆனால், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடங்கிய போருக்குப் பின்னர், ஆரம்பகட்ட ஒப்பந்தம் ஒன்று தோல்வியடைந்தது. தற்போது மத்தியஸ்தர்கள் மூலம் செய்திகளை பரிமாறிக்கொள்வது மட்டுமே நடைபெற்று வருவதாக ஈரானின் உயர்மட்ட தூதர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஞாயிற்றுக்கிழமை ஈரானின் தஸ்னீம் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், கமேனி மக்களுடன் இருக்கும் காட்சிகள் மற்றும் அவர் பல்வேறு சந்திப்புகளில் பங்கேற்கும் காட்சிகள் எதிர்காலத்தில் வெளியிடப்படும் என புரட்சிகர காவல்படையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், அந்தக் காட்சிகள் எப்போது வெளியாகும் என்பது குறித்து அவர் எந்த காலக்கெடுவையும் தெரிவிக்கவில்லை.