ரோஹன விஜேவீர மற்றும் விஜய குமாரதுங்க கொலைகள் : விசாரணை நடத்துமாறு கோரிக்கை
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayake) தனது கொள்கை பிரகடனத்தின் போது வழங்கிய உறுதிமொழிகளுக்கு அமைவாக, மக்கள் விடுதலை முன்னணியின் ஸ்தாபக தலைவர் ரோஹன விஜேவீர மற்றும் நடிகராக மாறிய அரசியல்வாதி விஜய குமாரதுங்க ஆகியோரின் கொலைகள் தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க(Chamara Sampath Dassanayake), நாடாளுமன்றத்தில் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
புதையுண்டு கிடக்கும் வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என ஜனாதிபதி நாடாளுமன்ற உரையில் தெரிவித்திருந்தார்.
விசாரணை
இதன்படி, ஜே.வி.பி.யின் ஸ்தாபகத் தலைவர் ரோஹன விஜேவீர(Rohana Wijeweera) மற்றும் நடிகராக மாறிய அரசியல்வாதி விஜய குமாரதுங்க ஆகியோரின் மரணங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
கிருலப்பனை பொலிஸ் நிலையத்தில் விஜேவீரவை கண்மூடித்தனமாக தாக்கியவர் யார், அவர் எவ்வாறு கொல்லப்பட்டார் மற்றும் பொரளை கனத்தைக்கு அவர் எவ்வாறு கொண்டு செல்லப்பட்டார் என்பதைக் கண்டறியவும். விஜயகுமாரத்துங்கவை சுட்டது யார், பொல்ஹெங்கொடையில் அவரை சுட பயன்படுத்தப்பட்ட, டி56 துப்பாக்கியை கொலையாளி பெற்றுக் கொண்டார் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படவேண்டும்.
இதன் மூலம், விஜேவீரவின் பிள்ளைகளுக்கும் விஜயவின் பிள்ளைகளுக்கும் நீதி கிடைக்க வேண்டும்” என்று அவர் கேட்டுக்கொண்டார்.
1989ஆம் ஆண்டு ஒருவர் ஜே.வி.பி.யில் இணைந்ததால், ஒரே குடும்பத்தின் அனைவரும் கொல்லப்பட்ட சம்பவம் ஊவாவில் நடந்தது. இந்த சம்பவங்களும் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க வலியுறுத்தினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |