முள்ளிப்பொத்தானையில் தொடரும் கொள்ளை அட்டகாசம்: ஒரே இரவில் மூன்று வீடுகள் உடைப்பு
தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எட்டாம் குலனி பகுதியில் மீண்டும் கொள்ளைச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இன்று (24.3.2026) அதிகாலை நான்கு மணியளவில் அப்பகுதியில் உள்ள மூன்று வீடுகள் உடைக்கப்பட்டு நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 10-ஆம் திகதி இதேபோன்றதொரு கொள்ளைச் சம்பவம் அப்பகுதியில் பதிவாகியிருந்தது. அன்று இவ்வாறு மூன்று வீடுகள் உடைக்கப்பட்டன, அதேபோன்ற பாணியில் இன்று மீண்டும் மூன்று வீடுகள் கொள்ளையர்களால் இலக்கு வைக்கப்பட்டுள்ளன.
கொள்ளை
தொடர்ச்சியாக ஒரே மாதத்தில் இரண்டு முறை இவ்வாறான கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றிருப்பது, அப்பகுதியில் பாதுகாப்பு பலவீனமாக உள்ளதோ என்ற அச்சத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
வீட்டிலுள்ளவர்கள் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்த நள்ளிரவு வேளையைப் பயன்படுத்திக் கொள்ளையர்கள் இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளனர்.
கொள்ளையடிக்கப்பட்ட வீடுகளில் இருந்த பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணத்தை அவர்கள் தந்திரமாகத் திருடிச் சென்றுள்ளனர்.
சம்பவம் குறித்து தம்பலகாமம் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
தகுந்த நடவடிக்கை
கைரேகை நிபுணர்களின் உதவியுடன் தடயங்களைச் சேகரிக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும், குற்றவாளிகளைக் கண்டறியத் தகுந்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முள்ளிப்பொத்தானை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் இவ்வாறான திருட்டுச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த, பொலிஸார் குறித்த பகுதிகளில் இரவு நேர ரோந்து நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும் எனப் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
தொடரும் இந்தக் கொள்ளைச் சம்பவங்களால் தங்களின் சொத்துக்களும் உயிர் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளதாக அந்தப் பகுதிவாசிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
ஆலிவர் பின்னால் இருக்கும் அந்த நபர் இவர்தானா, அடுத்த வில்லன் ரெடி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
திருட்டு விஷயம் தெரிந்ததும் வானதி சொன்ன விஷயம், நிலா சோழனுக்கு சொன்ன சந்தோஷ செய்தி... அய்யனார் துணை சீரியல் Cineulagam