பணம் மீளப்பெறல் இயந்திரங்களில் கொள்ளை - பொலிஸ் பரிசோதகர் கைது
வங்கிகளின் பணம் மீளப்பெறல் இயந்திரங்களில் பணம் கொள்ளையிடப்பட்டமை சம்பந்தமாக நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து மீகஹாதென்ன பொலிஸ் நிலையத்தின் நிர்வாக பிரிவு பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றவியல் விசாரணை திணைக்களம் தெரிவித்துள்ளது.
மீகஹாதென்ன பொலிஸ் நிலையத்தில் நிர்வாக பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றி வரும் பொலிஸ் பரிசோதகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கொள்ளை நடந்த இடங்களில் பொலிஸ் பரிசோதகரின் கார்
வெளிநாட்டவர்கள் இரண்டு பேர், ஹிக்கடுவை, பத்தேகம, காலி, கராப்பிட்டிய பிரதேசங்களில் உள்ள அரச வங்கிகளின் பணம் மீளப்பெறும் இயந்திரங்கள் சிலவற்றின் கணனி கட்டமைப்புக்குள் பிரவேசித்து பெருந்தொகை பணத்தை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து பொலிஸ் பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சந்தேக நபரான பொலிஸ் பரிசோதகரின் கார், பணம் கொள்ளையிடப்பட்ட இடங்களுக்கு சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து பிட்டிகல பொலிஸ் பிரிவில் அமுகொட பிரதேசத்தில் வைத்து பொலிஸ் பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பலப்பிட்டிய பிரதேசத்தை சொந்த இடமாக கொண்ட இந்த சந்தேக நபர், அமுகொட சித்தரகொட பிரதேசத்தில் தற்போது வசித்து வருகிறார். குற்றவியல் விசாரணை திணைக்களத்தினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வெளிநாட்டவர்கள் இருவர், ஹிக்கடுவை, பத்தேகம, காலி, கராப்பிட்டிய பிரதேசங்களில் உள்ள அரச வங்கிகளின் பணம் மீளப்பெறல் இயந்திரங்களின் கணனி கட்டமைப்புகள் பிரவேசித்து ஒரு கோடி ரூபாவுக்கும் மேல் கொள்ளையிட்டிருந்தனர்.
இதனிடையே தென் மாகாணத்தில் மூன்று இடங்களில் அரச வங்கிகளின் பணம் மீளப்பெறல் இயந்திரங்களில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கொள்ளையில் ஈடுபட்ட வெளிநாட்டவர்கள் இருவர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் கனடா மற்றும் பல்கேரியா நாட்டவர்கள் என தென் மாகாணத்திற்கான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கூறியுள்ளார்.
இவர்கள் கொழும்பு மற்றும் கட்டுநாயக்க பிரதேசங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.



