அம்பாறை அஷ்ரப் நகர் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட வீதி மறியல் போராட்டம்
அம்பாறை (Ampara) மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட ஒலுவில் அஷ்ரப் நகர் பகுதி மக்கள் தமது பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு கோரி வீதி மறியல் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
குறிப்பாக வீதி அபிவிருத்தி திணைக்களம் உட்பட உயர் அதிகாரிகள் அரசியல்வாதிகளுக்கு தமது பிரச்சினைகளை முன்வைத்தும் எதுவித பலனும் கிடைக்கவில்லை என பகிரங்க குற்றச்சாட்டு ஒன்றினை அப்பகுதி மக்கள் முன்வைத்துள்ளனர்.
குறித்த அஷ்ரப் நகரப்பகுதி மக்களின் அன்றாட ஜீவனோபாய நடவடிக்கைகள் உட்பட ஏனைய செயற்பாடுகள் நான்கு மாதங்களுக்கு மேலாக பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுக்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டு வருகின்றன.
பல்வேறு பிரச்சினைகள்
இவ்வருட முற்பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தினால் இப்பகுதி பிரதான வீதிகள் பாரிய சேதங்களுக்கு உள்ளாகியதுடன் ஒலுவில் நகரத்தையும் அஷ்ரப் நகரையும் இணைக்கின்ற பிரதான பாலம் ஒன்றும் பாரிய உடைப்பெடுத்துள்ளது.
இதனால் வழமை போன்று செயற்படுகின்ற இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து சேவையும் இடம்பெறவில்லை எனவும் இதனால் பாடசாலைக்கு தங்கள் பிள்ளைகள் செல்வதில்லை எனவும் குற்றச்சாட்டினை மக்கள் முன்வைத்துள்ளனர்.
சுமார் 125 குடும்பங்கள் வாழ்கின்ற இப்பகுதியில் வீடு இல்லாப்பிரச்சினை பொது மயானப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன.
அத்துடன், குறித்த அஷ்ரப் நகரில் இருந்து பாலம் உடைவு காரணமாக ஒலுவில் பகுதியை நோக்கி அத்தியாவசியத் தேவைக்காக முச்சக்கரவண்டி ஒன்றிற்கு தலா 2000 ரூபா செலுத்தி செல்வதாக குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |