மோட்டார் சைக்கிள்களில் சாகசம் காட்டிய இளைஞர்களுக்கு நேர்ந்த கதி
கடுவலை, வெலிவிட்ட பிரதேசத்தில் வீதிகளில் மோட்டார் சைக்கிளில் சாகசம் காட்டிய குற்றச்சாட்டின் 16 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த கடுவலை நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்த குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பு தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள்களில் பயணித்து வீதியில் பயணிக்கும் மக்களை துன்புறுத்திய இளைஞர்கள் குழுவொன்று தொடர்பில் கடுவலை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
பொலிஸார் எச்சரிக்கை
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இளைஞர்களை எச்சரித்துள்ளனர்.
இதன்போது பொலிஸாரின் அறிவுறுத்தலைப் புறக்கணித்துவிட்டு இளைஞர்கள் வேகமாகச் சென்றதுடன், அதிகாரிகள் அவர்களைத் துரத்திச் சென்று பிடித்து 16 மோட்டார் சைக்கிள்களைக் கைப்பற்றி இளைஞர்களை கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இளைஞர்கள் வெல்லம்பிட்டிய, முல்லேரியா, அங்கொட, மாலம்பே, களனிமுல்ல பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், சந்தேகநபர்களை நாளை செவ்வாய்க்கிழமை (ஜூலை 18) கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், சம்பவம் தொடர்பான விசாரணைகளை கடுவலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |