இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதிக்கும் அபாயம்
ஈரானின் மூலோபாய துறைமுகமான சபாஹரை இயக்கும் உடன்படிக்கையில் கையெழுத்திட்ட இந்திய நிறுவனங்கள் பொருளாதார தடைகளுக்கு உள்ளாகும் ஆபத்து குறித்து அமெரிக்கா எச்சரித்துள்ளது.
இந்த நீண்ட கால ஒப்பந்தத்தில் இந்திய போர்ட்ஸ் குளோபல் லிமிடெட் (Indian Ports Global Limited (IPGL) மற்றும் ஈரானின் போர்ட் அன்ட் கடல்சார் அமைப்பு (the Port & Maritime Organisation of Iran.) என்பன நேற்று கையெழுத்திட்டன.
10 ஆண்டு ஒப்பந்தத்தில் இரண்டு நாடுகளும் கையெழுத்திட்ட சில மணிநேரங்களுக்குப் பின்னர், தெஹ்ரானில் முதலீடு செய்யும் இந்திய நிறுவனங்கள் பொருளாதாரத் தடைகளுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.
ஓமன் வளைகுடாவில் உள்ள மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஈரானியத் துறைமுகம், பாகிஸ்தானைக் கடந்து, நிலத்தால் சூழப்பட்ட ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவை அடைய இந்தியப் பொருட்களுக்கு நுழைவாயிலை வழங்கும்.
120 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு
முன்னதாக, ஈரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பாக அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகள் இந்த துறைமுகத்தின் வளர்ச்சியைக் குறைத்தன
இந்த துறைமுக அபிவிருத்தியில் இந்தியாவின் ஐபிஜிஎல் சுமார் 120 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யும், மேலும் 250 மில்லியன் டொலர் கடனாக திரட்டப்படும்.
இந்நிலையில், எந்த ஒரு நிறுவனமும் - எவரும் - ஈரானுடனான வணிக ஒப்பந்தங்களில் அக்கறை கொண்டால், பொருளாதாரத் தடைகளின் சாத்தியமான ஆபத்து குறித்து அவர்கள் அறிந்திருக்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
You may like this...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |