வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலைகளில் தொற்று பரவல் ஏற்படும் அபாயம்
வவுனியாவில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலைகளில் சுகாதார தரப்பினரின் வழிகாட்டுதல்களை பின்பற்ற தவறுகின்றமையால் பாரிய தொற்றுப்பரவல் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி யூட்பீரிஸ் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் அதிகரித்து வரும் கோவிட் தொற்று நோயின் சமகால நிலவரம் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
பொருளாதார நோக்கம் இருப்பதால் அரசாங்கத்தின் கொள்கையின் பிரகாரம் ஆடைத்தொழிற்சாலைகள் இயங்குகின்றது. அதனை நிறுத்துவதற்கான அதிகாரம் எமக்கில்லை. எனினும் தொடர்ச்சியாக ஆடைத்தொழிற்சாலைகளில் கள ஆய்வுகளை முன்னெடுத்துள்ளோம்.
எமது கருத்துக்களை அவர்கள் செவிமடுப்பதாக தெரியவில்லை. குறிப்பாக ஆடைத்தொழிற்சாலையொன்று ஒரு கட்டிடத்திற்குள்ளேயே இயங்குகின்றது. 2500 ற்கும் மேற்பட்ட ஊழியர்கள் அங்கு கடமை புரிகின்றனர்.
ஆடைத்தொழிற்சாலைகள் சில நடைமுறைகளை பின்பற்றாமையினால் பாரிய பரவல் ஒன்று ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் இருக்கிறது. எனவே அனைவரையும் ஒரே நேரத்தில் வேலைக்கு அழைக்காமல் வேலை நேரத்தில் சுழற்சி முறையில் மாற்றத்தினை ஏற்ப்படுத்தி இயங்கலாம்.
அத்துடன் வெளிமாவட்டங்களில் உள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் அன்டிஜன் பரிசோதனையினை தனியார் வைத்தியசாலைகளில் கட்டணத்திணை செலுத்தி முன்னெடுக்கின்றனர்.
ஆனால் இங்குள்ள
தொழிற்சாலைகள் அனைத்தும் சுகாதார திணைக்களத்தினையே சார்ந்திருக்கின்றார்கள்.
நாம் இது தொடர்பாக பலமுறை தெளிவூட்டல்களை வழங்கியும் அவர்கள் அதனை
கடைப்பிடிக்கவில்லை. இது ஒரு பின்னடைவே. இது பாரிய பாதிப்பினையும்
ஏற்படுத்தும் என்பதை கூறிக்கொள்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.