நாடு முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலை : நுவரெலியாவில் 58 குடும்பங்கள் இடம்பெயர்வு
நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியாவின் (Nuwara Eliya) கந்தப்பளை - ஹைபொரஸ்ட் மஹாவலி குடியிருப்பிலுள்ள 58 குடும்பங்களை சேர்ந்த 162 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
குறித்த குடியிருப்புக்கு அருகில் ஆபத்தான மரங்கள் சரிந்து விழும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு நலன் கருதியே குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அபாயம்
இதில் 11 குடும்பங்களை சேர்ந்த 45 பேரை தற்காலிகமாக தோட்ட சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
எனினும், சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் போதிய இடவசதி இன்மையால் ஏனைய 47 குடும்பங்களை சேர்ந்த 117 பேர் உறவினர் மற்றும் அயலவர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அண்மையில் குறித்த பகுதியில் மூன்று வீடுகளில் மரங்கள் முறிந்து விழுந்து ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
நிலவும் கடும் மழை மற்றும் கடும் காற்றுடன் கூடிய மோசமான காலநிலை காரணமாக தங்களது வீடுகளுக்கு அருகில் உள்ள மரங்களும் அதன் கிளைகளும் அருகில் உள்ள வீடுகளுக்கும், உயிருக்கும், உடைமைகளும் பாதிப்பினை விளைவிக்கும் நிலையில் உள்ளது.
இதனால் இரவு நேரத்தில் நித்திரை கொள்ளாமல் குறித்த பகுதியில் வசிக்கும் அனைவரும் ஒன்றினைந்து வீதியில் நிற்பதே தமது தொடர் கதையாக உள்ளது. அத்துடன், இப்பகுதியிலுள்ள பாரிய மரங்கள் எந்த நேரத்திலும் விழும் அபாயம் காணப்படுவதாக சாரதிகளும் பிரதேசவாசிகளும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வனவள திணைக்களம்
எனினும்,1987ஆம் ஆண்டு குடியேற்றப்பட்ட காலத்திலிருந்து பலத்த காற்றினால் பெரிய மரங்கள் வீடுகள் மீது விழும் அபாயம் உள்ளதாக உரிய அதிகாரிகளுக்கு அறிவித்து எவ்வித பயனும் இல்லை எனவும் குறித்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இது தொடர்பில் வலப்பனை பிரதேச செயலாளரிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதையடுத்து, பிரதேச செயலாளரினால் ஆபத்தான மரங்களை அகற்றுமாறு வனவள திணைக்களத்தின் நுவரெலியா மாவட்ட வன அதிகாரிக்கு அறிவித்துள்ளார்.
ஆனால் பலத்த காற்றுடன் கூடிய மழைக்காலம் வரை அந்த மரங்களை அகற்ற மாவட்ட வன அலுவலர் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்துக்கின்றனர்.
எனவே இனி வரும் காலங்களில் மழையுடன் கூடிய பலத்த காற்று வீசினால் ஆபத்தினை ஏற்படுத்தும் வகையில் உள்ள மரங்களை பாரிய அனர்த்தங்கள் ஏற்படுவதற்கு முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |