அரிசிக்கு நிர்ணய விலை : இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம் - நளின் பெர்னாண்டோ
நாட்டில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட மிக அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்படுவது தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் அவ்வாறு அதிக விலைக்கு விற்பனை செய்பவர்களை கண்டறியும் வகையில் இன்று முதல் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் இடம்பெற்ற அமைச்சரவை உப குழு கூட்டத்தின் போது இது தொடர்பில் ஆராயப்பட்டதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.
கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகள்
மேலும், நிர்ணய விலைக்கு அதிகமாக அரிசி விற்பனை செய்யப்படும் பட்சத்தில், அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்தும் அமைச்சர் தெரிவிக்கையில்
சம்பா உள்ளிட்ட பல அரிசி வகைகள் இவ்வாறு நிர்ணய விலைக்கு அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
சம்பா அரிசி 230 ரூபாவிற்கும் நாட்டரிசி 220 ரூபாவிற்கும் கீரி சம்பா 260 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட வேண்டுமென நிர்ணய விலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டறியும் வகையில் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.