அரிசி ஆலைகளில் நாட்டிற்கு தேவையான அரிசி: வவுனியா மாவட்ட அரிசி ஆலை உரிமையாளர் சங்கம்
அரிசி ஆலைகளில் நாட்டிற்கு தேவையான அரிசி உள்ள போதும் வர்த்தகர்கள் குறைந்த இலாபத்தில் அதனை கொள்வனவு செய்து விற்பதற்கு தயாராக இல்லை என வவுனியா மாவட்ட அரிசி ஆலை உரிமையாளர் சங்க தலைவர் சி.விவேகானந்தன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
தேவையான அரிசியை வழங்குவதற்கு நெல்
அவர் மேலும் தெரிவிக்கையில், சிறுபோக நெல் வரும் வரை மக்களுக்கு தேவையான அரிசியை வழங்குவதற்கு நெல் இருக்கின்றது. அரிசி ஆலைகளிலும், பொருளாதாரம் உள்ள தனியார் கொள்வனவு செய்து வைத்துள்ள நெல்லும் உள்ளது. அதிகூடிய விலையில் விற்பதற்காக அவர்கள் வைத்துள்ளார்கள்.
அரிசி ஆலை உரிமையாளர்களைப் பொறுத்த வரை அரச கட்டளைக்கு உடன்பட்டு அரசின் விலை நிர்ணயத்திற்கு கொடுப்பதற்கு தாராளமான அரிசி இருக்கிறது. ஆனால் அரிசி தட்டுப்பாடு. வெளிநாட்டில் இருந்து இறக்கப் போவதாக கூறுகிறார்கள். முதல் இருந்த அரசாங்கம் அரிசியில் கொமிசன் எடுத்துள்ளார்கள். இது நல்லாட்சி செய்யும் அரசு.
எல்லா இடங்களிலும் உள்ள நெல்லினை கணக்கெடுத்து சந்தைப்படுத்துவதற்குரிய உதவியையும் அதற்குரிய பொறிமுறையையும் செய்ய வேண்டும். எம்மிடம் தற்போது போதிய அரிசி இருக்கிறது. வாங்குவதற்கு வர்த்தக நிலைய உரிமையாளர்கள் தயாரில்லை.
இலாபம் போதாது என கூறும் வியாபாரிகள்
முன்னைய காலத்தில் ஒரு கிலோகிராம் அரிசிக்கு 20, 30 ரூபாய் இலாபம் வைத்து விற்பனை செய்த சில்லறை வியாபாரிகள், மொத்த வியாபாரிகள் தற்போது அரசாங்கத்தால் கூறப்பட்ட கட்டுப்பாட்டு விலையில் இருந்து 5 ரூபாய் குறைத்து வழங்குமாறு கூறப்பட்டதற்கு இணங்க நாம் விநியோகிக்கின்ற போது அவர்கள் இலாபம் போதாது என கொள்வனவு செய்கிறார்கள் இல்லை.
வெள்ளை நாடு 230 ரூபாய் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட விலை. நாங்கள் 225 ரூபாவிற்கு கொடுக்க தயாராக இருக்கின்றோம். சிவப்பு நாடு 230 ரூபாய். அதையும் 225 இற்கு கொடுக்க தயார். அதை வாங்க முதலாளிமாரும் இல்லை. வத்தக நிலையம், சதொச, கூட்டுறவுச் சங்கம் என எவையும் இல்லை.
ஆனால் அரிசி இல்லை. அரிசி தட்டுப்பாடு எனக் கூறுகிறார்கள். வங்கியில் கடன் எடுத்து நெல் கொள்வனவு செய்தோம். அந்த கடனை 6 மாதத்தில் திருப்பிச் செலுத்த வேண்டும். அதனால் அரிசியை விற்க வேண்டும். அடுத்த சிறுபோக நெல் வருகிறது. இதை விற்றால் தான் சிறுபோக நெல்லை கொள்வனவு செய்ய முடியும். இதை அரசாங்கம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
இலங்கையில் தற்போது அரிசி தட்டுப்பாடு இல்லை. குளங்களில் நிறைய தண்ணீர் இருக்கிறது. சிறுபோக நெல் வந்தால் இந்த வருடத்திற்கே அரிசி தட்டுப்பாடு இருக்காது. இதனை அரசாங்கம் விளங்கிக் கொள்ள வேண்டும். அரிசி இருக்கிறது. அதை வாங்க வர்த்தக நிலையங்கள் தயார் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |