அதிவேக நெடுஞ்சாலைக்குள் செல்லும் வாகன சாரதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
தமிழ் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் அதிவேக நெடுஞ்சாலைகளினூடாக 462 மில்லியனுக்கும் அதிகமான வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நெடுஞ்சாலை பராமரிப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் ஆர்.ஏ.டி.கஹடபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதேவேளை நெடுஞ்சாலைக்குள் செல்லும் வாகன சாரதிகளுக்கான சில அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.
அவர் மேலும் தெரிவிக்கையில், இம்முறை தமிழ் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் கடந்த 10ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரையான 10 நாட்களில் அதிவேக நெடுஞ்சாலையில் 1.3 மில்லியன் வாகனங்கள் பயணித்துள்ளன. அதன் ஊடாக 462 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளது.
அதிவேக நெடுஞ்சாலைக்குள் செல்வோருக்கான அறிவிப்பு
இன்றும் பெருமளவான வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலை ஊடாக பயணிக்கும் என எதிர்பார்க்கிறோம். அதிவேக நெடுஞ்சாலைக்குள் நுழைவதற்கு முன்னதாக வாகனத்தை சோதித்து, டயர் நிலைமைகள் மற்றும் வாகன சமிக்ஞை விளக்குகளின் செயற்பாட்டை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
அதேபோல அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது முன்னால் செல்லும் வாகனத்துடன் 50 மீற்றர் இடைவௌியில் பயணிக்குமாறும் இருக்கைப் பட்டையை (சீட் பெல்ட்) முறையாக அணிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், நிலவும் மழையுடனான வானிலை காரணமாக வாகனத்தை கட்டுப்படுத்தும் வகையிலான வேகத்தில் பயணிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அத்தோடு உங்களது வாகனத்தில் ஏதேனும் கோளாறு ஏற்படுமானால் எமது அவசர தொலைபேசி இலக்கமான 1969 என்ற எண்ணுக்கு அழைக்குமாறும், இந்த தொலைபேசி இலக்கமானது 24 மணிநேரமும் செயற்பாட்டில் இருக்கும் என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |