பதவி உயர்வு வழங்காமல் பழிவாங்கும் முகாமையாளர்: போராட்டத்தில் குதித்த ஊழியர்கள்(Photos)
சங்கானை பனை தென்னை வள அபிவிருத்தி சங்க கூட்டுறவு பணியாளர்கள், சங்கானை பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்க முன்றலில் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
இப் போராட்டத்தில் பணியாளர்கள் "ஊதியத்தை அதிகரி, கிளை முகாமையாளரின் நியமனத்தை நிரந்தர நியமனமாக்கு, பணியாளர்களுக்குப் பதவி உயர்வு வழங்கு, தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர நியமனத்தை வழங்கு, வேலையோ அதிகம் சம்பளமோ குறைவு என்று எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தி கோஷமிட்டவாறு இன்று காலை 10 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் கருத்து தெரிவிக்கையில்,
குறிப்பாக 17 வருடங்களாக சங்கானை பனை தென்னை வள கூட்டுறவுச் சங்கத்திற்குக் கிளை முகாமையாளர் ஒருவர் நியமிக்கப்படாமல் இருப்பது பாரிய குறைபாடாகக் காணப்படுவதுடன், இதனால் நிர்வாக செயற்பாட்டினை கொண்டு நடாத்துவது பாரிய சிக்கல் வாய்ந்ததாகக் காணப்படுகின்றது.
ஆறு வருடங்களாகத் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகின்ற ஊழியர்களுக்கான நிரந்தர நியமனம் இன்னும் வழங்கப்படவில்லை.
மேலும் எட்டு வருடங்களாக நிரந்தர நியமனம் பெற்ற ஊழியர்களுக்கான பதவி உயர்வானது இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை வழங்கப்பட வேண்டிய நிலையில், குறித்த பதவியும் வழங்கப்படாது காணப்படுகின்றது.
இந்நிலையில் மரணித்தவர்கள் மற்றும் வேலையை விட்டு இடையில் விலகியவர்கள் பலர் காணப்படுகின்ற நிலையில் வேலை வாய்ப்புக்கள் வெற்றிடமாகக் காணப்படுகின்றன.
எமது சங்கானை சங்கத்தின் முகாமையாளர் எமக்கான பதவி உயர்வினை வழங்குவதற்கு மறுப்பு தெரிவித்துத் தனிப்பட்ட விரோதத்தைப் பழிவாங்குகிறார். அதுபோல யாழ். பிரதான சங்கத்தின் முகாமையாளரும் எமது பதவி உயர்வில் அக்கறை காட்டுவதில்லை'' என குறிப்பிட்டுள்ளார்.
அதில் ஒரு ஊழியர் "நான் பதவி உயர்விற்கான நேர்முகத் தேர்விற்குரிய ஆவணங்கள் ஏற்கனவே வழங்கியிருந்த நிலையில் நேர்முகத் தேர்விற்குச் சென்றேன். அங்கு நான் ஏற்கனவே வழங்கியிருந்த எனது ஆவணங்கள் கிழிக்கப்பட்டுள்ளன. அதன் பின்னர் வேறு ஆவணங்களையே வழங்கினேன் என தெரிவித்துள்ளார்.
தமக்கான தீர்வு கிடைக்கும்வரை தமது போராட்டம் தொடரும் என ஊழியர்கள் மேலும் கூறியுள்ளனர்.










கரூரில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு - முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு News Lankasri
