இந்தியாவுடனான ரகசிய ஒப்பந்தங்களை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்
இந்தியாவுடனான ரகசிய ஒப்பந்தங்களை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என முன்னிலை சோசலிசக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் புபுது ஜயகொட வலியுறுத்தியுள்ளார்.
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை விஜயத்தின் போது, அரசாங்கம் கூறுவது போன்று சிறிய மற்றும் முக்கியத்துவமற்ற சில ஒப்பந்தங்களில் கையெழுத்திட வாய்ப்பில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் முன் அரசாங்கம் மறைக்கும் உண்மையான ஒப்பந்தங்கள் மற்றும் உடன்பாடுகள் எவை என்பதை உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இந்த விஜயத்தின் போது, மாணவர் படைப்பிரிவு பயிற்சி பரிமாற்றம், பாதுகாப்பு பல்கலைக்கழக ஒத்துழைப்பு மற்றும் இந்தியாவால் வழங்கப்பட்ட ஆயுதங்களின் பராமரிப்பு தொடர்பான மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
எனினும், இத்தகைய சிறிய ஒப்பந்தங்கள் பொதுவாக அமைச்சரவை மட்டத்திலான கீழ்நிலை அதிகாரிகளால் கையெழுத்திடப்படுபவை என புபுது ஜயகொட சுட்டிக்காட்டியுள்ளார்.
வரலாற்றுப் பின்னணியை நினைவுபடுத்திய ஜயகொட, இதற்கு முன்னர் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்தது 38 ஆண்டுகளுக்கு முன்னரே என அவர் தெரிவித்துள்ளார்.
1987 ஆம் ஆண்டு இலங்கை - இந்திய ஒப்பந்தத்திற்குப் பின்னர் ஏற்பட்ட கடும் பதற்றமான சூழ்நிலையில், அப்போதைய பாதுகாப்பு அமைச்சராக இருந்த கே.சி. பந்த் 1988 ஆம் ஆண்டு விஜயம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, 38 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்தது, பாடசாலை மாணவர்களின் காடெட் பயிற்சி அல்லது துப்பாக்கி பராமரிப்பு பற்றி பேசுவதற்காக என அரசாங்கம் கூறுவதை ஏற்க முடியாது என தெரிவித்துள்ளார்.
மேலும், 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்தியாவில் மேற்கொண்ட விஜயத்தின் போது எட்டப்பட்ட உடன்பாடுகள் அல்லது 2025 ஏப்ரல் 05 ஆம் திகதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்த போது கையெழுத்திடப்பட்ட ஏழு ஒப்பந்தங்களின் பிரதிகள் இதுவரை நாட்டுக்கு வெளிப்படுத்தப்படவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டினார்.
அக்காலத்தில் கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை சட்டப்பூர்வமான ஒப்பந்தமாக மாற்றுவது குறித்து கலந்துரையாடவே இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்ததையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் மக்களுக்குத் தெரியாமல் ரகசியமாகச் செய்வதாக புபுது ஜயகொட குற்றம் சாட்டியுள்ளார்.
இரு நாட்டு அரசுகளுக்கும் இடையே உண்மையில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள், எட்டப்பட்ட ரகசிய உடன்பாடுகள் மற்றும் கையெழுத்திடப்பட்ட உண்மையான ஒப்பந்தங்கள் எவை என்பதை உடனடியாக நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டுமென அவர் அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 25