யுத்தத்தின் போது விமானியாக செயற்பட்டவருக்கு விதிக்கப்பட்டுள்ள தடை! சபையில் அம்பலமான தகவல்கள் (Live)
தேசிய மக்கள் சக்தியுடன் (NPP) அரசியலில் ஈடுபட்டதற்காக ஓய்வுபெற்ற எயர்வைஸ் மார்சல் சம்பத் துயாகொந்த உள்ளிட்ட 3 இராணுவ அதிகாரிகள் கறுப்புப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் வைத்து இன்றைய தினம் கருத்து தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், ஓய்வுபெற்ற எயர்வைஸ் மார்சல் சம்பத் துயாகொந்த எந்தவொரு விமானப்படைத் தளத்திற்குள்ளும் நுழைவதற்கும், விமானப்படை நிகழ்வுகளில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் சக்தியுடன் தீவிர அரசியலில் ஈடுபட்டதன் காரணமாக சம்பத் துயாகொந்த கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். எந்தவொரு ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியும் தீவிர அரசியலில் ஈடுபடுவதற்கு தடையில்லை.
நியாயமற்ற செயற்பாடு
பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா, கமால் குணரத்ன போன்ற எத்தனையோ ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் தீவிர அரசியலில் உள்ளனர். இந்த மூன்று அதிகாரிகளும் ஒரு போட்டி அரசியல் கட்சியுடன் அரசியல் செய்கிறார்கள் என்பதற்காக அவர்களை கட்டுப்படுத்துவது நியாயமற்றது என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் பதிலளிக்கையில், “ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிக்கு தீவிர அரசியலில் ஈடுபடுவதற்கு எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை. கம்பஹாவில் இடம்பெற்ற அரசியல் பேரணியொன்றின் போது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையிலும், விமானப்படையின் நற்பெயருக்கும் ஒழுக்கத்திற்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் உரையாற்றியமைக்காகவே ஓய்வுபெற்ற எயர்வைஸ் மார்சல் சம்பத் துயாகொந்த கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்” என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்போது எம்ஐ24 ஹெலிக்கொப்டர் படையணியின் விமானியாக பணியாற்றியவரே இவ்வாறு கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஹர்சன நாணயக்கார குற்றச்சாட்டு முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.