வரலாற்றுக் கட்டிடங்கள் புனரமைப்பு - சுற்றுலாத்துறையை வலுப்படுத்த புதிய ஒதுக்கீடு
கொழும்பு - கோட்டைப் பகுதியில் உள்ள வரலாற்று மற்றும் புராதன கட்டடங்களைப் புனரமைத்து, முக்கிய சுற்றுலா வலயமாக மாற்றுவதற்காக 77 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.
2027 வரவு செலவுத் திட்ட உரையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
உலக வங்கியின் நிதியுதவியுடன் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாணம், மன்னார், கற்பிட்டி மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க டச்சுக் கோட்டைகளை அரச-தனியார் பங்காண்மையின் ஊடாக சுற்றுலா மையங்களாக அபிவிருத்தி செய்ய முன்மொழியப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பான அறிவிப்பு
இதற்காக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பயன்படுத்தப்படாத நிதியிலிருந்து 240 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படவுள்ளது. கொழும்புத் துறைமுகத்தில் கப்பல் சுற்றுலாப் பயணிகளுக்கான முனையம் அமைத்தல். காலி, தங்காலை மற்றும் திருகோணமலை சுற்றுலாப் பயணிகள் முனையங்களை நவீனமயப்படுத்த 240 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், கடல் சுற்றுலா சேவைகளை விரிவுபடுத்த படகுகள் உள்ளிட்ட உபகரணங்களைக் கொள்வனவு செய்ய 500 மில்லியன் ரூபாய் சலுகைக் கடன் திட்டம் அறிமுகமாகவுள்ளது.
சிங்கராஜா மழைக்காடுகளை மையமாகக் கொண்ட தெற்கு சுற்றுலாத் திட்டத்தை மேம்படுத்த 300 மில்லியன் ரூபாய் மற்றும் முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கான மத்தியப்படுத்தப்பட்ட இணையவழி மின்னணு நுழைவுச்சீட்டு முறைமையை உருவாக்க 35 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
பொலன்னறுவையிலுள்ள மும்மொழிப் பாடசாலை வளாகத்தை ஹோட்டல் பாடசாலையாக மாற்றுவதற்கும், பின்னவல ஹோட்டல் பாடசாலையை மேம்படுத்துவதற்கும் 500 மில்லியன் ரூபாயும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட பயிற்சி பெற்ற சுற்றுலாப் பொலிஸார், பல்மொழி அதிகாரிகள், 24 மணிநேர அவசர அழைப்பு சேவை மற்றும் கைப்பேசி செயலி ஆகியவற்றை அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் செப்டெம்பர் மாதம் வரை இலங்கையின் சுற்றுலாத்துறை மூலம் 2,245 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மின்னஞ்சலில் வந்த மிரட்டல்... ஐரோப்பிய நாடொன்றில் 6300 பாடசாலைகளில் மாணவர்கள் வெளியேற்றம் News Lankasri