கோவிட் இறப்புகள் மற்றும் தொற்றுக்கள் குறித்து அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும் - மைத்திரிபால சிறிசேன
இலங்கையின் தொற்றுநோய் நிலைமை குறித்து உள்ளூர் மருத்துவ நிபுணர்கள் மற்றும் வெளிநாட்டு நிபுணர்களின் பரிந்துரைகள் மற்றும் கணிப்புகளைப் பரிசீலிக்க வேண்டியதன் அவசியம் குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் இந்த தொற்றுநோய் நெருக்கடியின் போது அரசாங்கம் முடிவுகளை எடுப்பதில் நெகிழ்வாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதிகரித்து வரும் கோவிட் இறப்புகள் மற்றும் தொற்றுக்கள் குறித்து அரசாங்கம் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று அவர் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
உள்ளூர் மருத்துவ நிபுணர்கள் மற்றும் வெளிநாட்டு நிபுணர்களின் கணிப்புகள் மற்றும் பரிந்துரைகளைக் கருத்தில் கொள்வது அவசியம்.
இந்த பிரச்சனையில் இலங்கையர்கள் அனைவரையும் கேட்டு நெகிழ்வாக இருக்க வேண்டும், என்று அவர் கூறினார். உலக சுகாதார அமைப்பு, ஒரு நட்பு அமைப்பு என்று கூறிய, சிறிசேன, அந்த அமைப்பிடம் இருந்து அதிக உதவியை நாட வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டினார்.
இந்த சூழ்நிலையை எதிர்கொள்ள அரசாங்கம், எதிர்க்கட்சிகளுடன் கூட்டு பொறிமுறையை அறிமுகப்படுத்துவது முக்கியம் என்றும் அவர் கூறினார்.
நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஒரு சந்திப்பை ஜனாதிபதி கூட்ட வேண்டும், நாடு எதிர்கொள்ளும் முக்கியமான சூழ்நிலை குறித்து அவர் விவாதிக்கவேண்டும்.
நிலவும் சூழ்நிலையால் பொதுமக்கள் தங்கள் வாழ்வின் நம்பிக்கையை இழந்து, மனச்சோர்வடைந்துள்ளனர். அவர்களின் மன உறுதியை மேம்படுத்த, ஒரு பொறிமுறையை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் மைத்திரிபால சுட்டிக்காட்டினார்.
நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க மன வலிமை முக்கியம் என்று நிபுணர்கள் கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.