சமூகத்தில் ஏற்படும் அழிவுகரமான தாக்கத்தை பற்றி சிந்திக்க வேண்டும் - இம்தியாஸ் பாக்கீர் மார்க்கர்
இலங்கையின் அனைத்து சமூகங்களிலிருந்தும், அன்புக்குரியவர்களுக்கு ஏற்பட்ட காணாமல்போகச் செய்யப்பட்ட தலைவிதி இனி ஒருபோதும் நிகழாமல் பார்த்துக்கொள்வது, அனைவரின் பொறுப்பாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
காணாமல்ஆக்கப்பட்டோர் தொடர்பான சர்வதேச தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் தமது கருத்தை வெளியிட்டுள்ளார்.
1971, 1988,1989 கிளர்ச்சி காலம், முப்பது ஆண்டுக்கால போர் மற்றும் போருக்குப் பிந்தைய காலப்பகுதிகளில், இலங்கையில் காணாமல்போகும் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன.
இதுபோன்ற ஆயிரக்கணக்கான காணாமல்போதல் மற்றும் காணாமல் ஆக்கப்படுதல் சம்பவங்கள் வடக்கு, தெற்கு என்று பாரபட்சமின்றி பதிவாகியுள்ளன.
இதன் காரணமாக, இனம் அல்லது மதத்தைப் பொருட்படுத்தாமல், சமூகத்தில் ஏற்படும் அழிவுகரமான தாக்கத்தைப் பற்றி அனைவரும் சிந்திக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட அனைத்து மக்களின் குடும்பங்களும் தன்னம்பிக்கையுடனும், பாதுகாப்புடனும் வாழக்கூடிய சூழல் இருக்க வேண்டும் என்றும் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் குறிப்பிட்டுள்ளார்.